
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமா குற்றங்கள் நடக்கிறது. குறிப்பாக சினிமாவில் ஒரு பெண்ணை விரட்டி விரட்டி காதலிப்பது இது மாதிரி விஷயங்கள் அதிகமா சினிமாவில் வருவதால் தான் ரியல் லைஃப்ல எதிரொலிக்கிறது என்ற கேள்விக்கு ஒரு பெண்ணை ஹீரோ விரட்டி விரட்டி காதலிப்பதை காட்டுகிறோம் ஆனால் எந்த ஹீரோவாவது காதலிக்க மறுக்கும் பெண் மீது ஆசிட் ஊற்றுவது, கத்தியால் குத்திகொலை செய்வது போல் காண்பிக்கிறோமா? என்று கேட்டார்.
அதன் பின்னர் இது போன்ற விஷயங்களுக்கு எதாவாது ஒரு குற்றம் சாட்டனும் அதுக்கு சினிமா என்றார். ஆனால் அதிக அளவில் ஆணவக்கொலைகள் நடக்கிறது , முதலில் ஆணவக்கொலை என்பதை ஏற்க மாட்டேன் , அது கொலை எங்கே இருந்து வருது ஆணவக்கொலை. அதை நான் ஏற்றுகொள்ள மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குஷ்பு தனது கருத்தை வாபஸ் வாங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது பற்றிய அவரது அறிக்கை:
புதிய தலைமுறை தொலைக்காட்சிப் பேட்டியில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு (பேட்டி அப்படித்தான் சுட்டப்பட்டிருக்கிறது!) பெண்கள் மீதான படுகொலை ஆசிட் வீச்சு போன்றவற்றிற்கும் ,வெகுசன சினிமா கதாநாயக மனோபாவத்திற்குமான தொடர்ப்பு பற்றி சொல்லியிருக்கிற கருத்து அதிர்ச்சியளிக்கிறது.
கதாநாயகர்கள் பெண்களைப் பின் தொடர்வது,தொந்தரவு செய்வது இவற்றைச் செய்கிறார்கள் என்றாலும் பெண்கள் மீது ஆசிட் வீச்சு,கொலைகளில் ஈடுபடுவதில்லை என்கிறார்.
பெண்கள் மீதான ஆசிட் வீச்சு,கொலை, பாலியல்வன்புணர்வு இவற்றை உருவாக்குவதில் பெண்களை வெறும் உடலாக ,ஆண்களின் உரிமைப் பொருளாக , சுய மரியாதை,விருப்பு வெறுப்பு இல்லாதவர்களாக சித்தரிக்கும் கருத்தாக்கத்திற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.
இந்தக் கருத்தாக்கமே (திரைப்படம்,எழுத்து,வாய்மொழி வழியாக)பெண்கள் மீதான ஆசிட்வீச்சு,கொலை போன்ற அதீத கொடூரங்களுக்குக் காரணமாகிறது என்பதை மறுக்க முடியாது.
இந்தப் புரிதல் இல்லாதவர் அல்ல குஷ்பு.
இன்றைய இளைய தலைமுறை , அரசியல்வாதிகளிடமிருந்து குறிப்பாக பெண்கள் விசயத்தில் மாற்றுச் சிந்தனைகளையும்,போர்க்குணத்தையுமே எதிர்பார்க்கிறது.
இளைய தலைமுறை அரசியல்வாதிகளான நாம் இன்னும் சில மூத்த தலைமுறை அரசியல்வாதிகளைப் போல கற்கால சிந்தனைகளை நியாயப்படுத்திக்கொண்டிருக்க முடியாது. அது பெண்களுக்கு இழைக்கப்படுகிற அநீதியாகவே இருக்கும்
குஷ்பு சினிமா உலகத்தை மட்டும் சேர்ந்தவராக இருந்தால் கூட ஒரு பெண் என்கிற முறையில் அவருடைய சப்பைக்கட்டு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
ஒரு பொறுப்பான அரசியல் கட்சியின் பிரதிநிதியாக, அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் என்ற போர்வையில் சினிமா உலகின் தவறுகளை நியாயப்படுத்துவது அறமாகாது.
இது காங்கிரஸ் கட்சியை மிக மோசமான வெளிச்சத்தில் காட்டுவதோடு பெண்கள் மற்றும் அவர்கள் பக்கம் நீதியின் பாற்பட்டு நிற்கிற ஆண்கள் கருத்தியல் ரீதியாக முன்னெடுத்திருக்கிற போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
அவர் அந்தக் கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்
ஜோதிமணி
செய்தித்தொடர்பாளர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
இவ்வாறு ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.