இந்தியாவுக்கு உதவ தயார்... கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியாவுடன் கைகோர்க்கும் சீனா!

By Asianet TamilFirst Published Mar 24, 2020, 7:25 PM IST
Highlights

"சீன மக்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி கடிதமும் எழுதினார். இந்தியாவிலும் சீனாவிலும் 100 கோடிக்கு மேல் மக்கள் இருக்கிறார்கள். எனவே நோயைக் கட்டுபடுத்துவது சிரமம் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். நோயைக் கட்டுபடுத்துவதற்கு இந்தியாவுக்கு தேவையான உதவிகளை இந்தியா செய்யும்.”

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், கொரொனாவால் பாதிக்கப்பட்ட சீனா இந்தியாவுக்கு உதவ முன் வந்திருக்கிறது.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில், தற்போது அதன் தீவிரம் குறைந்துவருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் வெளியே தெரிந்த வூகானில், மக்கள் வெளியே வரத் தொடங்கியிருக்கிறார்கள். சீனாவில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளபோதும், உலக நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா அனுபவ பாடங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறது சீனா.


இந்நிலையில் உலகில் அதிக மக்கள் தொகை உள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு உதவவும் சீனா முன்வந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை துணை இயக்குநரான செங் ஷுவாங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்தியாவுக்கு உதவுவது பற்றி வெளிப்படையாக அறிவித்தார். “கொரோனாவால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு இந்தியா செய்த உதவியை எங்களால் மறக்க இயலாது. தங்களை மட்டும் தற்காத்துக்கொள்ளாமல், பாதிப்பிலிருந்த சீனாவுக்கு இந்தியா உதவியது. இது காலமறிந்து செய்த உதவி. மேலும் கொரோனா வைரஸ் தொடர்பாக சீன அரசுடன் இந்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்தது.
சீன மக்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி கடிதமும் எழுதினார். இந்தியாவிலும் சீனாவிலும் 100 கோடிக்கு மேல் மக்கள் இருக்கிறார்கள். எனவே நோயைக் கட்டுபடுத்துவது சிரமம் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். நோயைக் கட்டுபடுத்துவதற்கு இந்தியாவுக்கு தேவையான உதவிகளை இந்தியா செய்யும்.” என்று தெரிவித்தார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு ஒரு விமானம் முழுவதும் முகக் கவசங்கள், சானிட்டைஸர்கள் ஆகியவற்றை இந்தியா அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

click me!