அருணாச்சலப்பிரதேசத்துக்கு ஏன் போனீங்க... அமித் ஷா சென்றதற்கு சீனா கண்டனமாம்... என்னத்த சொல்ல?

By Asianet TamilFirst Published Feb 20, 2020, 10:31 PM IST
Highlights

“இந்தியா-சீனா எல்லையில் கிழக்குப்பகுதி அல்லது திபெத்தின் தெற்குப்பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தெளிவான ஒன்று. அருணாச்சலப்பிரதேசம் என்று அழைக்கப்படுவதை சீனா அங்கீகரிக்கவில்லை."

அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.


அருணாசலப்பிரதேச மாநிலம் உதயமான தினத்தையொட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்மாநிலத்துக்கு சென்றார். ஆனால், உள்துறை அமைச்சர் அங்கு சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கெங் சுவாங் கூறுகையில், “இந்தியா-சீனா எல்லையில் கிழக்குப்பகுதி அல்லது திபெத்தின் தெற்குப்பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தெளிவான ஒன்று. அருணாச்சலப்பிரதேசம் என்று அழைக்கப்படுவதை சீனா அங்கீகரிக்கவில்லை.

 
இந்திய தலைவர்கள் சீனாவின் எல்லைக்கும், ஆளுகைக்கும் உட்பட்ட திபெத் பகுதிக்குச் செல்வது சீனாவின் இறையாண்மைக்கும், நாட்டின் எல்லைப்பகுதியை மதிப்புக்குறைவாக நினைப்பதற்கும் சமம் ஆகும். இவ்வாறு நடப்பது இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையையும், இருதரப்பு ஒப்பந்தத்தையும் மீறுவது போன்றது. இந்திய  தலைவர்கள் இனிமேல் அங்குச் செல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், எல்லைப்புற பிரச்னைகளை இன்னும் சிக்கலாக்கும். எல்லைப்பகுதியில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவ உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்
இந்நிலையில் சீனாவின் இந்தக் கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், “அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளோம். சீனாவின் கருத்துக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்" எனத் தெரிவித்தார். இந்தியா-சீனா எல்லையில் அருணாச்சலப்பிரதேசத்தை திபெத்தின் தெற்குப் பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதுவரை பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!