முதலமைச்சருக்கு கணைய புற்றுநோய் இருக்கிறது – ஒப்புக்கொண்ட மாநில அரசு!

By thenmozhi gFirst Published Oct 28, 2018, 1:15 PM IST
Highlights

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு கணைய புற்றுநோய் இருப்பதை, முதன்முறையாக அம்மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
 

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு கணைய புற்றுநோய் இருப்பதை, முதன்முறையாக அம்மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

உடல்நலக் கோளாறு காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பனாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், அடுத்த சில நாட்களில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 

அதன்பிறகும் அவரது உடல் நிலை தேராததால், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார் மனோகர் பாரிக்கர். சற்று உடல்நலம் தேறியதை அடுத்து, நாடு திரும்பிய அவருக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

பாரிக்கர் இந்தியாவிலும் அயல்நாட்டிலும் பல்வேறு மருத்துவமனைகளிலும் கடந்த 7 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் இல்லாததால் கோவா ஆட்சியதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட்டது. அக்டோபார் 14ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து பாரிக்கர் வெளியே வந்தது முதல் பொதுவெளியில் முகத்தைக் காட்டவில்லை. தற்போது வீட்டில் படுத்தப்படுக்கையாக இருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. அவருக்கு மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவருக்கு என்ன நோய் என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை குறித்து பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என பாஜக அரசுக்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. இதனால், இதற்கு மேலும் மறைக்க முடியாது என்ற நிலை ஏற்பட கோவா சுகாதார அமைச்சர் விஷ்வஜித் ரானே, முதலமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இந்த உண்மையை மறைக்க ஒன்றுமில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், “அவர் தன் குடும்பத்துடன் அமைதியாக வாழட்டும், கோவா மக்களுக்காக சேவை செய்த அவர் நிம்மதியாக இருக்கத் தகுதி படைத்தவர் என்றும், பாரிக்கர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட விரும்பினால், அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் விஷ்வஜித் ரானே தெரிவித்தார். அத்துடன், காங்கிரஸ் கட்சி நீதிமன்றம் சென்று, மனோகர் பாரிக்கரின் நோயைத் தெரிந்து கொள்ள விரும்பினால், அது அவர்கள் விருப்பம்” என்றும் கூறியுள்ளார்.
 

click me!