மக்கள் நல திட்டங்களை பட்டியலிட்டு செய்தியாளர்களை திக்குமுக்காட வைத்த முதல்வர்: சேலத்தில் கெத்து காட்டிய இபிஎஸ்

By Ezhilarasan BabuFirst Published Aug 8, 2020, 4:51 PM IST
Highlights

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சேலத்தில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அவர் தெரிவித்ததாவது:- 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சேலத்தில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அவர் தெரிவித்ததாவது:- 

இன்றையதினம், சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த நடைபெற்ற கூட்டத்தில்பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில், இதுவரை கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,750, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 3,743 நபர்கள், தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 958 நபர்கள், இறந்தவர்கள் 49 நபர்கள். இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் சுமார் 1.10 இலட்சம் நபர்கள். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான அரசின் சார்பில் 2,872 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 194 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் இருக்கின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவில் 279 படுக்கைகள் உள்ளன. தேவையான உபகரணங்கள் அனைத்தும் போதிய அளவு கையிருப்பில் உள்ளன. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. அந்த முகாம்களில் கலந்து கொண்ட 1,31,106 நபர்களுக்கும் பரிசோதனை செய்து அவர்களில் நோய்த் தொற்று அறிகுறி தென்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து குணமடையச் செய்தோம்.

இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் நோய் பரவல் தடுக்கப்பட்டிருக்கிறது. சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாண்புமிகு அம்மா அவர்கள் அறிவித்த திட்டங்கள் பெரும்பாலும் நிறைவு பெற்றுள்ளன. இன்னும் சில திட்டங்கள் விரைவாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்தபொழுது, சேலம் மாவட்ட மக்களுடைய கோரிக்கைகளை அம்மாவின்கவனத்திற்கு கொண்டு சென்றவுடன், மாண்புமிகு அம்மா அவர்கள் பல்வேறு பாலப் பணிகளுக்கு உத்தரவு வழங்கினார்கள். அதனடிப்படையில் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளன. சேலம் மாநகர மக்களின் நீண்டகால கோரிக்கையின் அடிப்படையில், வளர்ந்து வருகின்ற சேலம் மாநகரத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக ஐந்து ரோட்டில் மிகப்பெரிய பாலம் மற்றும் பல பாலங்கள் அம்மாவினுடைய அரசால் கட்டித் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், சில பாலங்களுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சில பாலங்களுக்கு நில எடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறன.

 

மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ரயில்வே கடவுகளின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்ட வேண்டுமென்ற மக்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும்விதமாக பல பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல, திருச்செங்கோடு-சங்ககிரி-கொங்கணாபுரம்-ஓமலூர் வரை நான்கு வழி சாலையாக அகலப்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. அப்பணி முடிந்தவுடன் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் துவங்கப்படும். ஓமலூரில் இருந்து மேச்சேரி வரையிலான சாலையையும் அகலப்படுத்துவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அறிக்கை கிடைத்தவுடன் அந்தப் பணிகளும் துவங்கப்படும். பவானி-மேட்டூர்-தோப்பூர் வரையிலான சாலையையும் விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதுடன், விபத்துகளும் குறைக்கப்படும்.
மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை அம்மாவின் அரசு நிறைவேற்றி வருகிறது. விவசாயப் பெருமக்களின் உபதொழிலாக இருப்பது கால்நடை வளர்ப்பு. சேலம் மாவட்ட மக்கள் பல ஆண்டுகாலமாக வைத்த கோரிக்கையை நிறைவேற்றும்விதமாக தலைவாசல் அருகே கூட்டு ரோட்டில் பிரம்மாண்டமான கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் வேகமாக விரைவாக நடைபெற்று  கொண்டிருக்கின்றன. ஆறு மாதத்திற்குள் அந்தப் பணிகள் நிறைவு பெறுமெனக் கருதுகிறேன். 

அதுமட்டுமல்லாமல், பல கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலமாக சேலம் மாவட்டம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட காவேரி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி,நகராட்சிகள், பேரூராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் பிரச்சனை இல்லாத ஒரு மாவட்டமாக சேலம் மாவட்டத்தை உருவாக்கித் தந்துள்ளோம். ஆத்தூர் செல்கின்ற மெயின் பைப் லைன் பழுதடைந்துள்ளதை மாற்றும் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இருப்பாளி கூட்டுக் குடிநீர் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இளம்பிள்ளை கூட்டு குடிநீர் திட்டத்தில், ஆட்டையாம்பட்டி, மல்லூர், பனைமரத்துப்பட்டி, எடங்கணசாலை, வேம்படிதாளம் போன்ற பகுதிகளையெல்லாம் ஒன்றாக இணைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. அதேபோல, ஜே.ஜே.எம் திட்டத்தில் ரூபாய் 118 கோடி மதிப்பீட்டில், 72 ஊராட்சிகளில் 1.17 இலட்சம் குடிநீர்இணைப்புகள் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  மாண்புமிகு அம்மாவின் அரசு விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்து
திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று உத்தரவு வழங்கி, அது சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேட்டூர், ஓமலூர், சங்ககிரி மற்றும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வறண்ட பகுதிகளிலுள்ள 100 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அந்தப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, இன்னும் ஆறு மாதத்திற்குள் அந்த பணிகள் நிறைவுபெறும்.

 

அவ்வாறு நிறைவு பெறும்பொழுது, ஏரிகளில் தண்ணீர் நிரம்பி, விவசாயிகள்,பொதுமக்களுக்கு தேவையான நீர் கிடைக்கும். மழைக் காலங்களில் அணை நிரம்பி,உபரி நீர் வெளியேறும் காலகட்டங்களில், அந்த உபரி நீரை இந்த ஏரிகளில் நிரப்புவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இப்பொழுது கர்நாடகத்தில் கபினி,கே.எஸ்.ஆர் அணைகளிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் எதிர்பார்த்தபடி அணை நிரம்ப கூடிய சூழ்நிலை உள்ளது. சுமார் 1.40 இலட்சம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. பவானிசாகரிலிருந்தும் அதிகமாகத் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பருவமழை நன்றாக பெய்துகொண்டிருக்கிறது. அனைத்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டிருக்கிறது ஏற்கனவே டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு, டெல்டா பகுதிகளில் 3.50 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் வேளாண் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது, தற்போது 4 லட்சம் ஏக்கர் பரப்பளவு என
கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கர் டெல்டா பகுதிகளில் நடவு செய்யதுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல், மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளினால் கடந்த ஆண்டு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையை அம்மாவின் அரசு படைத்துள்ளது. கடந்த காலங்களில் இதுவரை 23 லட்சம் மெட்ரிக் டன்தான் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்துள்ளார்கள்.

அனைத்து இடங்களிலும் கால்வாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரைகளிலும் அந்தப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன. ஒரு சொட்டு நீர்கூட வீணாகாமல் கடைக்கோடியில் இருக்கின்ற விவசாயிகளுக்கும் முழுமையாக தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. உபரியாக வெளியேறும் நீரைத் தடுத்து சேமிப்பதற்கு தடுப்பணைகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இவையெல்லாம் நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை ஊடகம் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக வேளாண் பெருமக்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். இதுவரை சேலம் மாவட்டத்தில் 32,468 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கியுள்ளோம். 13,153 நபர்களுக்கு பட்டாக்கள் கொடுத்துள்ளோம் என அவர் கூறினார். 
 

click me!