அடுத்த சிக்சருக்கு தயாராகும் முதலமைச்சர் ஸ்டாலின்.. அமைச்சர்கள், அதிகாரிகள் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்.

By Ezhilarasan BabuFirst Published Jun 10, 2021, 8:53 AM IST
Highlights

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க இன்று அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க இன்று அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின் MBBS, BDS போன்ற மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு தேவை என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், நீட் தேர்வு மூலம் மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த கடந்த ஆண்டில் உள் இட ஒதுக்கீடு கொண்டு வர முடிவு செய்தது. இதையடுத்து மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை வழங்க ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. 

கலையரசன் தலைமையிலான குழு, தீர ஆராய்ந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்தது. கலையரசன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் அடிப்படையில் கடந்த கல்வியாண்டில் ( 2020-2021 ),7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று, அதன் மூலம் சுமார் 400 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்தனர். அப்போதே, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்புகளில் உள் இட ஒதுக்கீடு தேவை என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. 

இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தற்போதைய அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்புகளில் 2.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி முடிவெடுக்க நாளை அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. சென்னை தலைமைச் செயலக கூட்டரங்கில் இன்று மாலை 4.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் மருத்துவம் & மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், காகர்லா உஷா, நந்தகுமார், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 10% உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று ஏற்கனவே ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரை பற்றியும், அதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய 2.5% இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது பற்றியும் விவாதித்து, முடிவு எடுக்கப்பட உள்ளது. ஏற்கனவே 10% வரை பரிந்துரை இருப்பதால், சட்ட சிக்கலின்றி நடப்பு கல்வியாண்டிலேயே ( 2021-2022 ) அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5% உள் இட ஒதுக்கீடு முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், இதன் மூலம் சுமார் 100 அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பலனடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!