ஊராட்சி நூலகங்களில் முரசொலி நாளிதழை வாங்கியே தீரணும்..! கட்டாயப்படுத்தும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகம்

By karthikeyan VFirst Published Jun 9, 2021, 9:49 PM IST
Highlights

அனைத்து ஊராட்சி நூலகங்களிலும் திமுக நாளிதழான முரசொலியை வாங்குமாறு வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் அனுப்பிய சுற்றறிக்கை, ஊராட்சி நிர்வாகங்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
 

திமுக நாளிதழான முரசொலி நாளிதழை அனைத்து ஊராட்சி நூலகங்களிலும் கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் சுற்றறிக்கை மற்றும் வாட்ஸ் அப் மூலம் ஊராட்சிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக நாமக்கல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்ல ராசாமணி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வந்த சுற்றறிக்கையை காட்டி இதுகுறித்து பேட்டியளித்த செல்ல ராசாமணி, தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள நூலகங்களிலும் கட்டாயம் முரசொலி நாளிதழை வாங்க வேண்டும். அதற்கு ஆண்டு சந்தாவாக ரூ.1800க்கான வங்கி வரைவோலை எடுத்து கொடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை வந்துள்ளது. 

தமிழகத்தில் மொத்தம் 12,524 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து நூலகங்களிலும், எந்த கட்சியின் சார்பும் இல்லாத தினமணி, தினத்தந்தி, தினகரன் ஆகிய நாளிதழ்கள் வாங்கப்படுகின்றன. அப்படியிருக்கையில், திமுக சார்பு முரசொலி நாளிதழை மக்கள் பணத்தில் வாங்கியே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. ஆண்டு ஒன்றுக்கு இதன்மூலம் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் மக்கள் பணம் முரசொலி நாளிதழ் நிர்வாகத்துக்கு செல்லும். 5 ஆண்டுகளுக்கு 11 கோடியே 27 லட்சம் ரூபாய் முரசொலி நிர்வாகத்திற்கு செல்லும். எனவே இந்த சுற்றறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திரும்பப்பெற வேண்டும் என்று செல்ல ராசாமணி வலியுறுத்தியுள்ளார்.

இது அதிகார துஷ்பிரயோகம் என விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 

click me!