வெளிப்படையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையை உச்ச நீதிமன்றம் எச்சரித்ததை பாஜக அரசு மறந்துவிடுகிறது என தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் இடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை கண்டு பாஜக அரசு பயப்படுவது தெளிவாக தெரிகிறது என கூறியுள்ளார்.
அமலாக்கத்துறை சோதனை, கைது
மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மூலமாக அரசியல் கட்சிகளை மிரட்டுவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களாக இருந்த மணிஷ் சிசோடியா , சத்யேந்தர் ஜெயின் ஆகியோரை கைது செய்தனர். இதனையடுத்து தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியையும் அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
தொடர்ந்து அமைச்சர் பொன்முடி இல்லத்திலும் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியது. இந்தநிலையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில் நேற்று கைது செய்தனர்.
பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை
இந்த கைது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கைது மற்றும் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் . அரசியல் நோக்கங்களுக்காக இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு எதிராக சுதந்திரமாக செயல்படும் விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை!
பயப்படும் பாஜக - ஸ்டாலின்
எதிர்க்கட்சித் தலைவர்களை திட்டமிட்டு துன்புறுத்துவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். வெளிப்படையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையை உச்ச நீதிமன்றம் எச்சரித்ததை பாஜக அரசு மறந்துவிடுகிறது. எதிர்க்கட்சிகள் இடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை கண்டு பாஜக அரசு பயப்படுவது தெளிவாக தெரிகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்