காமராஜர், கலைஞர் போல் என் ஆட்சியில்... பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் பெருமிதம்..

By Thanalakshmi VFirst Published May 16, 2022, 1:13 PM IST
Highlights

பெருந்தலைவர்‌ காமராசர்‌ காலம்‌, பள்ளிக்‌ கல்வியின்‌ பொற்காலம்‌ என்பதைப்‌ போல - முத்தமிழறிஞர்‌ கலைஞரின்‌ காலம்‌ கல்லூரியின்‌ காலம்‌ பொற்காலம்‌ என்பதைப்‌ போல - எனது தலைமையிலான ஆட்சியின்‌ காலம்‌, உயர்கல்வியின்‌ பொற்காலம்‌ ஆகவேண்டும்‌ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ 164- ஆம்‌ ஆண்டு பட்டமளிப்பு விழாவில்‌ முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர், அனைத்து இளைஞர்களையும்‌ கல்வியில்‌, ஆராய்ச்சியில்‌, சிந்தனையில்‌, செயலில்‌, திறமையில்‌ சிறந்தவர்களாக மாற்றவே ”நான் முதல்வன்”திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.  பல்வேறு நிறுவனங்களைச்‌ சார்ந்தவர்கள்‌ அரசுக்கு வைக்கும்‌ கோரிக்கை என்னவென்றால்‌ -வேலைகள்‌ இருக்கின்றன, ஆனால்‌ அதற்குத்‌ தகுதியான இளைஞர்கள்‌ கிடைக்கவில்லை' என்று சொல்கிறார்கள்‌.

நான் முதல்வன் திட்டம்:

அப்படியானால்‌ இளைஞர்களுக்கு அனைத்துத்‌ தகுதிகளையும்‌ உருவாக்க வேண்டிய கடமையானது இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தக்‌ கடமையைத்தான்‌ தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. அதில்‌ வெற்றி காண வேண்டும்‌ என்று
நினைக்கிறது.

மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டுதல்கள்‌, கல்வி நிறுவனங்கள்‌, நாடு முழுவதும்‌ உள்ள 150-க்கும்‌ மேற்பட்ட உயர்கல்விக்கான உதவித்தொகைகளின்‌ தகவல்கள்‌ போன்ற தகவல்களை எளிதில்‌ பெறும்‌ வகையில்‌, "நான்‌ முதல்வன்‌” என்பது உருவாக்கப்பட்டிருக்கிறது.

மாணவர்களுக்கான அரசு:

வசதி படைத்தவர்கள்‌ - பணம்‌ செலுத்தி தனியார்‌ நிறுவனங்களின்‌ மூலமாக பயிற்சிகள்‌ எடுத்துக்‌ கொள்வார்கள்‌. ஆனால்‌ ஏழை எளிய, விளிம்பு நிலையில்‌ இருக்கக்கூடிய மக்களால்‌ அது இயலாது. எனவே அந்த வாய்ப்பை அரசுதான்‌
அனைவருக்கும்‌ வழங்கிட வேண்டும்‌. அந்தக்‌ கடமையைப்‌ பல்வேறு வகையில்‌ செயல்படுத்துவதற்காகத்தான்‌
ஏராளமான திட்டங்களை நமது அரசு தீட்டி இருக்கிறது.

வேலை கிடைக்கவில்லை என்று எந்த இளைஞரும்‌ இருக்கக்‌ கூடாது. தகுதியான இளைஞர்கள்‌ வேலைக்குக்‌ கிடைக்கவில்லை என்று நிறுவனங்களும்‌ சொல்லக்‌ கூடாது. அத்தகைய நிலையைத்‌ தமிழ்நாடு அரசு உருவாக்க நினைக்கிறது. அதற்காகத்‌ தான்‌ பல திட்டங்களைத்‌ தீட்டி உருவாக்கிக்‌ கொண்டிருக்கிறோம்‌.

உயர்கல்வி உதவிதொகை திட்டம்:

பெண்கல்வியை ஊக்குவிக்கும்‌ பொருட்டும்‌, இடைநிற்றலைத்‌ தவிர்க்கும்‌ பொருட்டும்‌, மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ உயர்கல்வி உறுதித்‌ திட்டம்‌" என்ற திட்டத்தைத்‌ தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில்‌ சேர்ந்து, படிப்பு முடியும்‌ வரை, மாணவர்களுடைய வங்கிக்‌ கணக்கில்‌ மாதம்‌ ரூபாய்‌ 1000/- செலுத்தும்‌ வகையில்‌ இத்திட்டம்‌ உருவாக்கப்பட்டிருக்கிறது. 

மேலும்‌, கல்வி பயிலும்‌ மாணவர்களுக்கு, இலவசப்‌ பேருந்து பயணம்‌, கல்வி உதவித்தொகை, உணவுடன்‌ கூடிய தங்கும்‌ விடுதிகள்‌ இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை, நிதிப்‌ பற்றாக்குறை இருந்தபோதிலும்‌, மாணவர்களுடைய நலன்கருதி தொடர்ந்து வழங்கப்படுகிறது.

இலவசக்‌ கல்வித்‌ திட்டம்:

முதல்‌ தலைமுறையாக உயர்கல்வி பயில வரும்‌ ஏழை மாணவர்கள்‌, கூலி வேலை செய்யும்‌ பெற்றோரின்‌ பிள்ளைகள்‌, பெற்றோரை இழந்த பிள்ளைகள்‌. கணவனால்‌ கைவிடப்பட்டோர்‌ மற்றும்‌ கைம்பெண்களின்‌ பிள்ளைகள்‌ இலவசமாக இளநிலைப்‌ படிப்புகளில்‌ சேர்ந்து பயன்பெறக்கூடிய வகையில்‌, சென்னைப்‌ பல்கலைக்கழகம்‌ 2010- ஆம்‌ ஆண்டு முதல்‌ "சென்னைப்‌ பல்கலைக்கழக இலவசக்‌ கல்வித்‌ திட்டம்‌” என்கிற சிறப்புமிகு திட்டத்தைச்‌ செயல்படுத்தி வருவதை நான்‌ மனதாரப்‌ பாரட்டுகிறேன்‌.

சமூக நீதி - திருக்குறள் தொழில் நெறி: 

திருநங்கைகளுக்குச்‌ சென்னைப்‌ பல்கலைக்கழகத்திலும்‌, சென்னைப்‌ பல்கலைக்கழகத்தின்கீழ்‌ இயங்கி கொண்டிருக்கக்கூடிய அனைத்துக்‌ கல்லூரிகளிலும்‌, வரும்‌ கல்வியாண்டு முதல்‌, இளநிலை மற்றும்‌ முதுநிலையில்‌ இலவசமான படிப்பு வழங்கப்படும்‌ என்கிற திட்டம்‌, எல்லாவற்றையும்‌ விட எனக்கு உண்மையில்‌ மனமார்ந்த மகிழ்வைத்‌ தந்து கொண்டிருக்கிறது.

பெருந்தலைவர்‌ காமராசர்‌ காலம்‌, பள்ளிக்‌ கல்வியின்‌ பொற்காலம்‌ என்பதைப்‌ போல - முத்தமிழறிஞர்‌ கலைஞரின்‌ காலம்‌ கல்லூரியின்‌ காலம்‌ பொற்காலம்‌ என்பதைப்‌ போல - எனது தலைமையிலான ஆட்சியின்‌ காலம்‌, உயர்கல்வியின்‌ பொற்காலம்‌ ஆகவேண்டும்‌ என்று திட்டமிட்டுச்‌ செயல்பட்டுக்‌ கொண்டிருக்கிறோம்‌. சென்னைப்‌ பல்கலைக்கழகக்‌ கல்லூரிகளில்‌, 2022- 2023 ஆம்‌ கல்வியாண்டு முதல்‌, இளநிலை பயிலும்‌ மாணவர்களுக்குச்‌ "சமூகநீதி" மற்றும்‌ "திருக்குறள்‌ காட்டும்‌ தொழில்நெறி" ஆகிய பாடங்கள்‌ விருப்பப்‌ பாடங்களாக இடம்பெற இருப்பதைப்‌ பாராட்டி நான்‌ மகிழ்கிறேன்‌ என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: நீட் கோச்சிங் மையங்கள் கொள்ளையடிக்க தான் இருக்கிறது.. ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் சர்ச்சை பேச்சு !

click me!