முதலமைச்சர் பதவிக்கு தம்பிதுரை குறி! கொளுத்திப் போடும் டி.டி.வி!

By vinoth kumarFirst Published Sep 18, 2018, 11:08 AM IST
Highlights

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை முதலமைச்சர் ஆசையில் இருப்பதாக அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை முதலமைச்சர் ஆசையில் இருப்பதாக அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.கவின் முக்கிய தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் குறித்து கடந்த சில நாட்களாக அதிர்ச்சிகரமான தகவல்களை டி.டி.வி தினகரன் வெளியிட்டு வருகிறார். கடந்த வாரம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தினகரன், சென்னையில் வால்க்கிங் செல்லும் போது தன்னை விஜயபாஸ்கர் சந்தித்து பேசியதாக கூறினார். 

மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை கைவிட்டுவிட்டதாக விஜயபாஸ்கர் புலம்பியதாகவும் தினகரன் தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கருக்கு அண்மையில் தான் கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தன்னிடம் விஜயபாஸ்கர் வழிய வந்து பேசியதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறியதாகவும் தினகரன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

டி.டி.வி தினகரன் விஜயபாஸ்கர் குறித்து பேசி மூன்று நாட்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது வரை விஜயபாஸ்கர் அந்த பேச்சுக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஒப்புக்கொள்ளவும் இல்லை. இந்த நிலையில் மக்களவை துணை சபாநாயகரும் அ.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளருமான தம்பிதுரை குறித்து டி.டி.வி தினகரன் கூறியுள்ள கருத்து அ.தி.மு.க வட்டாரத்தில் புதிய புயலை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரனிடம், பா.ஜ.கவை மிக கடுமையாக தம்பிதுரை விமர்சிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த தினகரன், அ.தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் தம்பிதுரைக்கு துவக்கம் முதலே முதலமைச்சர் பதவி மீது ஒரு கண் உண்டு. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்த போது தம்பிதுரையும் அந்த பதவிக்கு குறி வைத்ததாக தினகரன் தெரிவித்தார். 

ஆனால் முதலமைச்சர் பதவி எடப்பாடியிடம் சென்றதால் தம்பிதுரை சிறிது வருத்தத்தில் இருப்பதாகவும் தினகரன் கூறினார். இருந்தாலும் கூட தம்பிதுரைக்கு முதலமைச்சர் பதவி மீது தொடர்ந்து ஆசை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் தான் தற்போது அ.தி.மு.கவில் இருந்து கொண்டு பா.ஜ.கவை தம்பிதுரை விமர்சிப்பதாக தினகரன் கூறினார். அதாவது பா.ஜ.கவின் கோபத்தை ஏற்படுத்தி அந்த கோபத்தை எடப்பாடி மீது திருப்பிவிடலாம் என்பது தம்பிதுரையின் நோக்கமாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார். 

இதன் மூலம் எடப்பாடியை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு பின்னர் பா.ஜ.க தலைவர்களை காக்கா பிடித்து முதலமைச்சர் ஆகலாம் என்று தம்பிதுரை கனவு காண்பதாக தினகரன் கூறியுள்ளார். அ.தி.மு.க நிர்வாகிகள் குறித்து தினகரன் ஒவ்வொரு நாளும் அவிழ்த்துவிடும் தகவல்கள் திகில் கதைகளை மிஞ்சுவதாக இருப்பதாக அ.தி.மு.க நிர்வாகிகளே கூறி வருகின்றனர்.

click me!