விஜயகாந்த் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு... உள்ளாட்சித் தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமா..?

By Thiraviaraj RMFirst Published Jul 13, 2021, 11:08 AM IST
Highlights

 இந்த 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

கடந்த ஜூன் 11ம் தேதி சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தது உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான அச்சாரம் எனக் கூறப்படுகிறது. 

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது தேமுதிக. அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அதிக சீட்டுக்களை கேட்டு அதனை அதிமுக ஒதுக்காததால் கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக- அமமுகவுடன் கூட்டணி அமைத்தது. ஓரிடத்தில் கூட தேமுதிகவால் வெற்றிபெற முடியவில்லை.  

இந்நிலையில், விஜயகாந்தை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன், எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோரும் உடன் சென்றனர். விஜயகாந்த், வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலினை எல்.கே.சுதீஷ் வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது, கோவிட் நிவாரண நிதிக்கான காசோலையை விஜயகாந்த் வழங்கினார். அதனை ஸ்டாலின் பெற்று கொண்டார். இந்த சந்திப்பின் போது, விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் இரண்டு மகன்களும் உடன் இருந்தனர்.

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை குறித்தும், உள்ளாட்சி தேர்தல் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. ஆனால், விஜயகாந்த் உடல்நலம் பற்றி முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார் என்று தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்வில்லை.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் இருந்ததால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இதனிடையே செப்டம்பர் 15ம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

இந்த நிலையில்தான் விஜயகாந்த், மு.க.ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால், இது மரியாதை மற்றும் நட்பு நிமித்தமான சந்திப்பு தான். திமுக வலுவாக இருப்பதால் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை எனக்கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
 

click me!