நீங்க கொஞ்சம் பேசாம இருந்தாலே போதும்... அதுவே பாராட்டுற மாதிரிதான்.. ஸ்டாலினுக்கு எடப்பாடி பஞ்ச்!

By Asianet TamilFirst Published Sep 12, 2019, 9:46 AM IST
Highlights

அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளை ஸ்டாலினால் கொஞ்சமும் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. நாட்டை பற்றி எதுவும் கவலைப்படாத கட்சி திமுக. திமுக ஆட்சியில் ரூ.26 ஆயிரம் கோடி ரூபாய்தான் தொழில் முதலீடு வந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் ரூ.53 ஆயிரம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது, எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டன என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு இரு வார கால சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த வெளி நாட்டு சுற்றுப்பயணத்தை விமர்சித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மா நாட்டில் எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டன, எத்தனை தொழிற் வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் கிடைத்தன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என்று கேள்வி எழுப்பினார். அப்படி வெள்ளை அறிக்கை வெளியிட்டால், முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவதாகவும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மு.க. ஸ்டாலினின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக எந்த முதல்வரும் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இப்போதும் தமிழக அரசை பாராட்ட மு.க.ஸ்டாலினுக்கு மனசு வரவில்லை. அவர் விமர்சனம் செய்யாமல் இருந்தாலே எங்களைப் பொறுத்தவரை பாராட்டுகுரியதுதான்.
தமிழக அரசு எவ்வாறு செயல்பட்டுகொண்டிருக்கிறது என்பது பற்றி மு.க.ஸ்டாலினுக்கு தெரியாது. அதில் அவருக்கு ஈடுபாடும் இல்லை. அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளை ஸ்டாலினால் கொஞ்சமும் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. நாட்டை பற்றி எதுவும் கவலைப்படாத கட்சி திமுக. திமுக ஆட்சியில் ரூ.26 ஆயிரம் கோடி ரூபாய்தான் தொழில் முதலீடு வந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் ரூ.53 ஆயிரம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது? எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டன?” என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 

click me!