முன்னிலைப்படுத்திக்கொள்ள முனைகிறார்கள்.. இக்கட்டான நேரத்திலும் இப்படியா.? எதிர்க்கட்சிகளை வறுத்தெடுத்த ஈபிஎஸ்!

By Asianet TamilFirst Published Apr 17, 2020, 8:25 PM IST
Highlights

மருத்துவம் தொடர்புடைய கொரோனா வைரஸ் விஷயத்தில் ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா? மருத்துவ வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகளை தமிழக அரசு ஏற்கும். எதிர்க்கட்சிகள் எந்த வகையில் ஆலோசனை கூற முடியும்? 

இக்கட்டான நேரத்தில்கூட தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள எதிர்க்கட்சிகள் முனைகிறார்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து சேலத்துக்கு கார் மூலம் சென்றார். பின்னர் சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “சேலத்தில் கொரோனா தொற்று பரவிய 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அந்தப் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சேலத்தில் கொரோனா வைரஸ் பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.


கொரோனா நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 தமிழகத்தில் 98 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுவிட்டது. தமிழக அரசு செய்த ஆர்டரின் பேரில் 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. மேலும் 1.25 லட்சம் ரேபிட் பரிசோதனைக் கருவிகளைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து இதுவரை ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் தமிழகத்துக்கு வரவில்லை. விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு எந்தத் தடையும் விதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம். இதேபோல சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளை எடுத்துச்செல்லவும் தடையில்லை. சர்க்கரை ஆலைகள் இயங்கவும் தடை ஏதும் இல்லை.” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது குறித்து 20ம் தேதி அறிவிக்கப்படும். மருத்துவம் தொடர்புடைய கொரோனா வைரஸ் விஷயத்தில் ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா? மருத்துவ வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகளை தமிழக அரசு ஏற்கும். எதிர்க்கட்சிகள் எந்த வகையில் ஆலோசனை கூற முடியும்? இக்கட்டான நேரத்தில்கூட தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள எதிர்க்கட்சிகள் முனைகிறார்கள். குறை சொல்ல இது நேரம் இல்லை.” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

click me!