
ஜெனிவாவில் வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடந்துவரும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு மதிமுக பொதுச்செயலாளர், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசிவருகிறார்.
ஈழத்தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாகவும் ஈழத்தமிழர்களின் மீதான மனித உரிமை மீறல் குறித்தும் இலங்கைப் போர்க்குற்றம் குறித்தும் பேசினார்..
ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோ பேசிமுடித்த பிறகு வைகோவை சிங்களர்கள் 35 பேர் சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் பேசியுள்ளார் வைகோ.
வாக்குவாதத்தின்போது வைகோ பேசியதை மட்டும் சிங்களர்கள் வீடியோ பதிவு செய்ததாக வைகோ தெரிவித்துள்ளார். தன்னை சூழ்ந்த சிங்களர்கள், இலங்கை போர்க்குற்றத்தில் ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்தவர்கள் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைத்தே வைகோ மிரட்டப்பட்டது கடும் கண்டனத்துக்கு உரியது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைகோ மீதான தாக்குதல் முயற்சி கண்டனத்திற்குறியது எனவும், வைகோவுக்கு உரிய பாதுகாப்பு கோரி மத்திய அரசை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.