இனிக்க இனிக்க பேசிய எதிரிகளின் பேச்சுகளை கேட்டு செயல்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இன்று எந்த நிலையில் உள்ளார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இனிக்க இனிக்க பேசிய எதிரிகளின் பேச்சுகளை கேட்டு செயல்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இன்று எந்த நிலையில் உள்ளார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை ராயப்பேட்டையில் நடந்த விழாவில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் அதிமுகவில் நேற்று இணைந்தனர். விழாவுக்கு கரூர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியில் சுமார் 3,000 பேர் இணைந்தனர். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
பல்வேறு கட்சிக்கு சென்று வந்தவர் செந்தில்பாலாஜி. பச்சோந்தி கூட கொஞ்சம் நேரம் கழித்து தான் நிறம் மாறும். ஆனால் 5 கட்சிக்கு போய் வந்திருக்கிறார். அவர் ஒரு அரசியல் வியாபாரி. அதிமுகவில் வியாபாரத்தை தொடங்கி முடித்தார். அமமுகவில் தனது வியாபாரத்தை தொடங்கினார். அங்கு சரியாக வியாபாரம் நடக்கவில்லை. கொள்கை பிடிப்பில்லாத ஒருவர் என்றால், அது செந்தில்பாலாஜி தான்.
அதிமுக எனும் பேரியக்கத்துக்கு இளைஞர்கள் நிச்சயம் தேவை என்ற அடிப்படையில் தான், வேறு கட்சியில் இருந்து வந்தாலும் எல்லாவற்றையும் மறந்து கட்சியில் அவரை எம்.எல்.ஏ.வாகவும், அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எனும் மிகப்பெரிய அங்கீகாரமும் கொடுத்து ஜெயலலிதா கவுரவப்படுத்தினார். அந்த நன்றியை மறந்துவிட்டு, இன்றைக்கு இந்த இயக்கத்தை உடைக்கவேண்டும். கட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டம் தீட்டி அதற்கு துணை நின்று அமமுக எனும் கட்சியை உண்டாக்கி, அந்த கட்சிக்கு பக்கபலமாக இருந்து செயல்பட்டு, அதிமுகவுக்கு துரோகம் செய்ய நினைத்தார். ஆனால் இறைவன் அங்கேயும் அவரை விட்டு வைக்கவில்லை. அது தான் கடவுள். நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தால் நிச்சயம் கெட்டது தான் நடக்கும். நினைப்பு போல தான் அவரது நிலையும் இப்போது இருக்கிறது.
அதிமுகவில் 44 ஆண்டுகாலம் நான் இருந்திருக்கிறேன். அதனால்தான், மக்களால் எனக்கு இந்த விலாசம் கிடைத்திருக்கிறது. கட்சியின் இதர நிர்வாகிகளும் அப்படித்தான். ஆகவே உழைப்பும், விசுவாசமும் எங்கிருந்தாலும் நிச்சயம் தனி மரியாதை உண்டு. செந்தில் பாலாஜி போன்ற அரசியல் வியாபாரிகள் அவ்வப்போது வருவார்கள். வேலை முடிந்து விட்டால் வெளியே சென்று விடுவார்கள். இந்த இயக்கத்தை உடைப்பதற்கும், ஆட்சியை கவிழ்ப்பதற்கும் யார் எவ்வளவு சதித்திட்டம் தீட்டுகிறார்கள்? என்று அனைவருக்கும் நன்றாக தெரியும். இனிக்க இனிக்க பேசிய எதிரிகளின் பேச்சுகளை கேட்டு செயல்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இன்று எந்த நிலையில் உள்ளார்கள்? என்று எல்லோருக்கும் தெரியும்.
அண்ணன், தம்பி சண்டை போட்டால் வெளியே செல்வோம். இணக்கமான உறவு ஏற்பட்டால் மீண்டும் இணைந்து கொள்வோம். அது எல்லா குடும்பத்திலும் உண்டு. அந்தவகையில் மீண்டும் நாம் இணைந்திருக்கிறோம். எனவே நாம் ஒற்றுமை உணர்வுடன் செயலாற்றி எம்.ஜி.ஆர். கண்ட கனவை நிஜமாக்கி, ஜெயலலிதா கட்டிக்காத்த இந்த இயக்கத்தை நாம் கட்டி காப்போம். எப்போதுமே அதிமுக எனும் இயக்கம் தொண்டர்களால் ஆளப்படக்கூடிய இயக்கம். தொண்டர்கள் முன்னின்று, உழைப்பால் வளர்ந்த இயக்கம். எனவே அனைவருக்கும் முழு மரியாதை உண்டு. அதிமுகவை பொறுத்தவரை தனிப்பட்ட நபருக்கு உரிமை இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவாக்கி தந்த இந்த இயக்கத்தை அனைவரும் ஒன்று சேர்ந்து கட்டி காக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.