தகுதியுள்ள இவர்களை காக்க வைக்காதீங்க... அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு....!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 6, 2021, 5:26 PM IST
Highlights

காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை உடனடியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் லால்வேனா, மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர்ஜானி டாம் வர்கீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள், நிதி ஒதுக்கீடு ஆகியன குறித்த விவரங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 

கலைஞர் கருணாநிதியால் 2010ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்விற்காக, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை என்ற தனித் துறை உருவாக்கப்பட்டது. இந்த கூட்டத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை எவ்விதத் தாமதமுமின்றி வழங்கிட அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் அறிவுறுத்தினார். நலத்திட்டங்கள், உபகரணங்கள் பெற விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள என தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உடனடியாக அவ்வுதவிகளை வழங்கிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட தேவையான நடவடிக்கைகளை அரசுத் துறைகள் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவிகித இடஒதுக்கீடும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடும் மற்றும் 20 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குச் சம வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான நலவாரியம், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களைச் சீரிய முறையில் செயல்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், அரசுப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணச் சலுகை, வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை ஆகியவை எவ்வித தொய்வும் இல்லாமல் வழங்கப்பட வேண்டும் தெரிவித்தார். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைத்தல் அணுகுதல் வாய்ப்புகளை வழங்கிட உலக வங்கி நிதி உதவியின் கீழ் சுமார் ரூ.1702 கோடி மதிப்பிலான மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டத்தைத் தமிழ்நாட்டில் விரைவாகச் செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் முறையாக வழங்கப்படுவதையும், அரசுக் கட்டடங்களை மாற்றுத் திறனாளிகள் அணுகுவதற்கு எளிமையாக இருக்கும் விதமாக அமைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். 
 

click me!