பிரதமர் தளபதி... நாமெல்லாம் படை வீரர்கள்... முதல் முறையாக மோடியை புகழ்ந்த ப.சிதம்பரம்..!

By vinoth kumarFirst Published Mar 26, 2020, 12:19 PM IST
Highlights

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் மோடி அறிவித்தது வரலாற்றுத் திருப்புமுனையான முடிவு. இந்த நேரத்தில் நாம் இதற்கு முன் செய்த விவாதங்களை, விமர்சனங்களைப் பின்னுக்குத் தள்ளிவைக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் நாமெல்லாம் படை வீரர்களாக இருப்போம். 

கொரோனா வைரஸுக்கு எதிராக தேசம் நடத்தும் போரில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிரதமர் மோடி படைத்தலைவர், மக்கள் நாமெல்லாம் படைவீரர்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் பாராட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வந்த ப. சிதம்பரம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை ஆதரித்து கடந்த 23-ஆம் தேதி ஒருநாள் ஜனதா ஊரடங்கு பிரதமர் மோடி அறிவித்த போது அதை ப.சிதம்பரம் வரவேற்றார். இதேபோல் நாட்டின் முக்கிய நகரங்களில் குறைந்து 4 வாரங்களுக்கு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 இந்நிலையில், ஏப்ரல் 14 வரையிலான 21 நாள் ஊரடங்கு காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இதுவரை வரவேற்காத நிலையில் முதல் ஆளாக ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். அதில்,  கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் மோடி அறிவித்தது வரலாற்றுத் திருப்புமுனையான முடிவு. இந்த நேரத்தில் நாம் இதற்கு முன் செய்த விவாதங்களை, விமர்சனங்களைப் பின்னுக்குத் தள்ளிவைக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் நாமெல்லாம் படை வீரர்களாக இருப்போம். மோடி படைத் தலைவராகச் செயல்படுவார். பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டியது நமது கடமையாகும் என்று கூறியுள்ளார்.

ஆனால், பிரதமர் மோடியைப் பாராட்டி ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை என்பது அவரின் தனிப்பட்ட கருத்து , அதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

click me!