சிதம்பரத்தைத் துரத்தும் சிபிஐ அதிகாரிகள் ! ஜாமீன் மறுக்கப்பட்டதால் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு !!

By Selvanayagam PFirst Published Aug 20, 2019, 7:51 PM IST
Highlights

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு டெல்லி  ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து  அவரது வீட்டை சிபிஐ அதிகரிகள் முற்றுகையிட்டனர். ஆனால் அவர் அங்கு இல்லாதால் திரும்பிச் சென்றனர்.
 

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம், 2007-ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சர்  பதவி வகித்தார். அப்போது அவர், மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐ.என்.எக்ஸ். மீடியா தொலைக்காட்சி நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத் தந்தார்.

இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவினார். இதற்காக அவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு லஞ்சம் தரப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சி.பி.ஐ. ஒரு குற்ற வழக்கும், சட்டவிரோத பண பரிமாற்ற பிரச்சனையில் அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கும் தொடுத்து அவை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு டெல்லி ஐகோர்ட்டில் விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

இதையடுத்து, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக டெல்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டுக்குள் இன்று மாலை சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென நுழைந்தனர். அவர் கைது செய்யப்படலாம் என வதந்தி பரவியதால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சிதம்பரம் வீட்டில் இல்லாதால் சிபிஐ அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

click me!