
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ரூபாய் நோட்டு தடையை நடைமுறைப்படுத்தி, ரூ.500, ரூ1000 நோட்டுகளை தடை செய்தது. அந்த நடவடிக்கையின் பாதிப்பு இன்னும் மறையாத நிலையில், விரைவில் காசோலைகள்(செக் புக்)அனைத்தும் தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் டிஜிட்டல் பரிமாற்றத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கையை மத்தியஅரசு விரைவில் எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கருப்புபணம், ஊழல், கள்ள நோட்டு, தீவிரவாதத்தை கட்டுப்படுத்த, நாட்டில் 85 சதவீதம் புழக்கத்தில் இருந்த ரூ.500,ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின் மக்கள் சொல்லமுடியாத துயரங்களையும், வேதனைகளையும் அனுபவித்தனர்.
ஏறக்குறைய 15 லட்சம் பேர் வேலையிழந்தனர், சிறு, குறுந்தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மூடப்பட்டன. இந்த நிலைமை சரியாக 6 மாதங்களுக்கு மேல் ஆனது.
மக்களை வலுக்கட்டாயமாக டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு அரசு மாற்றியது. அதேசமயம், பணப்புழக்கம் சீரடைந்ததும் மக்கள் மீண்டும் ரொக்கப்பணப் பரிமாற்றத்துக்கே மாறினர்.
இந்நிலையில், டிஜிட்டல் பரிமாற்றத்தை தீவிரப்படுத்தும் நோக்கில், காசோலைகளை தடை செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீண் கந்தவேல் நிருபர்களிடம் கூறுகையில், “ நாட்டில் டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்த, வேகப்படுத்த விரைவில் மத்திய அரசு காசோலைகளுக்கு தடைவிதிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
மக்களை டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பரிமாற்றத்தை செய்ய வைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க அரசுக்கு ரூ.25 ஆயிரம் கோடியும், அதன் பாதுகாப்பு, போக்குவரத்துச் செலவுக்கு ரூ.6 ஆயிரம் கோடியும் அரசுக்கு செலவாகிறது. இதை குறைக்கும் நோக்கில் டெபிட், கிரெடிட் கார்டுகள் புழக்கத்தை மக்களிடையே அதிகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
ரூபாய் நோட்டு தடைக்குப்பின், மக்களிடையே டிஜிட்டல் வாலட், கியூஆர் கோட், என்.எப்.சி. தொழில்நுட்பம், சவுண்ட் வேவ் சிஸ்டம்ஸ், விர்சுவல் கார்டு, யு.பி.ஐ.பேமெண்ட், ஆதார் பே போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு, பணப்பரிமாற்றம் எளிதாக்கப்பட்டுள்ளது. இதை மேலும் வலுப்படுத்தினால், அனைத்துபரிமாற்றங்களும் டிஜிட்டல் மயமாகும் என அரசு நம்புகிறது.
இருப்பினும், தற்போது, 95 சதவீத பரிமாற்றம் ரொக்கம் மற்றும் காசோலைகள் மூலமே நடந்துவருகிறது. மிகப்பெரிய வர்த்தகப் பரிமாற்றம், பொருட்களுக்கு செலுத்தும் பணம் நீண்ட கால அடிப்படையில் வழங்கும்போது அதுகாசோலை அடிப்படையில்தான் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், நிலம் விற்பனை செய்தல், வாங்குதல் கூட காசோலையில் நடந்து வருகிறது. ரொக்கப்பணப்பரிமாற்றம் வலுவாக இருப்பதால், அதில் மாற்றம் செய்யாமல், காசோலைகளை தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது”எனத் தெரிவித்தார்.