எங்களை ஜெயிக்க வச்சா சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் ரத்து ! ஸ்டாலின் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Mar 23, 2019, 7:33 AM IST
Highlights

தி.மு.க. கூட்டணியை வெற்றிபெறச் செய்தால் சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் ரத்துசெய்யப்படும் என்று சேலம் பிரசார கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
 

நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க.வின் கோட்டை தான் சேலம் என்பதை நாம் மறந்துவிட முடியாது. தி.மு.க. எப்பொழுதெல்லாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து இருக்கின்றதோ, அப்போதெல்லாம் சாமானிய மக்களுக்காக எத்தனையோ திட்டங்கள் உருவாக்கித் தரப்பட்டிருக்கின்றது. ஆனால், இன்றைக்கு ஆட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றோம் என்று ஒன்றையாவது சொல்லக்கூடிய தகுதியை, திராணியை பெற்றிருக்கின்றதா? என கேள்வி எழுப்பினார்.

மோடியும், எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த 2 பேர் சேர்ந்துதான் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது புதிதாக 3-வது ஒருவர் சேர்ந்திருக்கின்றார். 

டாக்டர் ராமதாஸ். 5 வருடமாக நாம் கூட ஆளும் கட்சி அ.தி.மு.க.வை பார்த்து இப்படி திட்டியது கிடையாது. அவ்வளவு திட்டு, கேவலமான முறையில் திட்டு, அப்படி எல்லாம் திட்டித் தீர்த்துவிட்டு இப்பொழுது கூட்டணி சேர்ந்து இருக்கின்றார்கள். ஏனென்றால் கேட்டதெல்லாம் இப்பொழுது கிடைத்திருக்கின்றது அவருக்கு. சீட்டு மட்டுமா கிடைத்திருக்கின்றது, எல்லாம் கிடைத்திருக்கின்றது. ஒருவேளை கேட்டதைவிட அதிகமாக கிடைத்திருக்கலாம் எனவே, அதற்காக கூட்டணி என கலாய்த்தார்.

5 மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் ஏற்காத சென்னை-சேலம் எட்டு வழி சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கின்றோம். 

அதே நேரத்தில் மாற்றாக சென்னை-சேலம் இடையில் ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலைகள், சாலைகள் அனைத்தையும் சாலைகளின் இருபுறமும் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தை பயன்படுத்தி அகலப்படுத்தவும், மேம்படுத்தவும் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியை நாம் அளித்திருக்கின்றோம் என ஸ்டாலின் பேசினார்..

click me!