தமிழக அமைச்சர்கள் பொதுமக்களுக்கு உதவ ஒவ்வோரு நிவாரண முகங்களுக்கு தொடர்ந்து சென்று கொண்டிருந்தாலும் அனைத்து சாலைகளும் ஆறுகளைப் போல நீர் நிரம்பி வழிந்து கொண்டிருப்பதால் தமிழக அமைச்சர்களால் அனைவருக்கும் உதவி கரம் நீட்ட முடியவில்லை என தெரிவித்தார்.
புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த திமுக மக்களை குழு தலைவர் டி.ஆர் பாலு மத்திய அரசு தமிழகத்திற்கு உடனடியாக மத்திய குழுவை அனுப்பி மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தாக்கிய மிக்ஜம் புயல் காரணமாக பல இடங்களில் தண்ணீரில் முழ்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மேலும் பொதுமக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்தநிலையில் மக்களவையில் பூஜ்ய நேரத்தின்போது திமுக மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் காரணமாக சுமார் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார். கடுமையான சூழல் நிலவுவதாக குறிப்பிட்டவர் கடந்த மூன்று நாட்களாக பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடப்பதாக தெரிவித்தார்.
ரயில்கள் அனைத்தும் நகரத்திற்கு வெளியே நகர முடியாமல் நின்று கொண்டிருப்பதாகவும், விமானங்கள் பறக்க முடியாமல் தடைபட்டிருப்பதாலும் பொதுமக்கள் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தமிழக அரசால் வழங்கப்படும் உணவுகளை கூட பெற முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்தார். தமிழக அமைச்சர்கள் பொதுமக்களுக்கு உதவ ஒவ்வோரு நிவாரண முகங்களுக்கு தொடர்ந்து சென்று கொண்டிருந்தாலும் அனைத்து சாலைகளும் ஆறுகளைப் போல நீர் நிரம்பி வழிந்து கொண்டிருப்பதால் தமிழக அமைச்சர்களால் அனைவருக்கும் உதவி கரம் நீட்ட முடியவில்லை என தெரிவித்தார். மிகவும் துயரமான ஒரு சூழல் நிலவுவதாக குறிப்பிட்ட டி.ஆர். பாலு தமிழகத்திற்கு மத்திய அரசு உதவ முன்வர வேண்டும் என குறிப்பிட்டார்.
மழை வெள்ளத்தின் காரணமாக ரூ.6230 கோடி கேட்டு நேற்றைய தினம் தமிழக அரசு மூன்று மனுக்களை அனுப்பி இருப்பதாக தெரிவித்தத டி ஆர் பாலு அவற்றில் முதற்கட்டமாக 5000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கோரிக்கை விடுத்திருப்பதாக குறிப்பிட்டார்.
தமிழக அரசின் இந்த கோரிக்கையை மத்திய அரசு தவறாமல் உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த டி ஆர் பாலு காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் மத்திய அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் மத்திய அரசு தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக மத்திய குழுவை அனுப்பி சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.