
சென்னை மாநகராட்சி திமுக கைப்பற்றியுள்ள நிலையில் அக்கட்சியின் சார்பில் மேயராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடந்து முடிந்த சென்னை பெருநகர மாநகராட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 153 வார்டுகளை திமுக வென்று சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. அதிமுக 15 வார்டுகளையும், காங்கிரஸ் 13 வார்டுகளையும் விசிக, சிபிஎம் தலா 4 வார்டுகளையும், மதிமுக 2 வார்டுகளையும் அமமுக, சிபிஐ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பாஜக ஆகிய கட்சிகள் தலா ஓரிடத்திலும் வென்றன. தவிர 5 சுயேட்சைகளும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியதன் மூலம் அக்கட்சியைச் சேர்ந்த பட்டியலினப் பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
தேர்தலுக்கு முன்பு மேயர் பதவியைப் பிடிப்பதில் 17-ஆவது வார்டில் போட்டியிட்ட கவிதா நாராயணன் பெயர் பலமாக அடிப்பட்டது. ஆனால், அவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெய்சங்கரிடம் தோல்வியடைந்ததால், மேயர் பதவி போட்டியிலிருந்து அவர் பெயரை விலக்கும் நிலை ஏற்பட்டதாக திமுகவில் சொல்கிறார்கள். கவிதா நாராயணன் உள்குத்து அரசியல் காரணமாகத் தோற்கடிக்கப்பட்டாரா என்ற கேள்வியும் திமுகவில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக திமுகவில் பரபரப்பாக விவாதங்கள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. கவிதாவின் கணவர் புழல் நாராயணன் அமைச்சர் சேகர்பாபுவின் தீவிர ஆதரவாளர் ஆவார். அதே வேளையில் கவிதா நாராயணன் தேர்தலில் தோல்வியடைந்ததால் தற்போது பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்குப் பெயர் மேயர் பதவிக்கு அடிப்படத் தொடங்கியிருக்கிறது.
ஆலந்தூர் மண்டலத்தில் 159-ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் அமுதபிரியா செல்வராஜ் பெயர் பலமாக அடிபடுகிறது. இவருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியனின் ஆதரவும் உள்ளது. இதேபோல முதல்வர் மு.க. ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 70-ஆவது வார்டில் போட்டியிட்டு வென்ற ஸ்ரீதரணி பெயரும் மேயர் பதவிக்கு அடிபடுகிறது. ஸ்ரீதரணிக்கும் மேயர் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. முதல்வர் இறுதி செய்யும் மேயர் வேட்பாளர், இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படுவார் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் மார்ச் 4 அன்று மேயரைத் தேர்வு செய்வதற்கான மறைமுகமாக தேர்தல் உள்ளது குறிப்பிடத்தக்கது.