நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவை... சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரபரப்பு கடிதம்..!

By Asianet TamilFirst Published Sep 14, 2020, 8:25 AM IST
Highlights

நீட் தேர்வு தொடர்பாக அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த தற்கொலைகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதற்கிடையே தமிழகம் உள்பட நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வுகள் நடைபெற்றன. நீட் தேர்வுக்கு எதிராக பல அமைப்புகள் தேர்வு மையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் நீதிமன்றத்தையும் விமர்சித்திருந்தார் நடிகர் சூர்யா. இந்நிலையில், நடிகர் சூர்யாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் . சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும்  நீதிமன்றத்தின் நேர்மையையும் சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.  சூர்யாவின் இந்த கருத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் விட்டால், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.


அந்தக் கடிதத்தில் கொரோனாவுக்கு பயந்து காணொலி காட்சி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் சென்று தேர்வு எழுத உத்தரவிடுகிறது என்ற சூர்யாவின் வாசகங்களை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

click me!