
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரை தாக்கிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு சென்னையிலிருந்து மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்ற விஜயகாந்திடம், தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சிலர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து விஜயகாந்துக்கும் செய்தியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தாம் தாக்கப்பட்டு தள்ளிவிடப்பட்டதாக அந்த செய்தியாளர் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் விஜயகாந்த், அனகை முருகேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனகை முருகேசன் கைது செய்யப்பட்டார். விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில், அந்த வழக்கை விசாரித்த ஆலந்தூர் நீதிமன்றம், விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. பின்னர் பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டு பிப்ரவரியில் ஆஜராக உத்தரவிடப்பட்ட்டது.
இதைதொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம் செய்தியாளரை தாக்கிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டது. மேலும் சென்னை விமானநிலைய காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு ஜனவரி 8 க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.