சாலைக்கு வரும் மக்களை போலீசார் தடுத்து துன்புறுத்தக் கூடாது..!! சென்னை உயர் நீதிமன்றம் போலீசுக்கு அறிவுரை..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 31, 2020, 5:00 PM IST
Highlights

மக்களின் அத்தியாவசிய தேவையை போலீசார் கருத்தில் கொள்ள வேண்டும் .  அரசியலமைப்பு சட்டம் வழங்கும் பிரிவு 21ன் படி மக்களின் வாழும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது .

ஊரடங்கு நேரத்தில் வெளியில் செல்லும் மக்களை  அவசியமின்றி தடுத்து துன்புறுத்த வேண்டாம் என தமிழக அரசுக்கும் காவல் துறைக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது . கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில் நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஆனால் அவற்றையெல்லாம் மீறி பொதுமக்கள் சாலையில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது .  போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.   இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரவி என்பவர் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார் ,  அதில் சாலையில் அவசர தேவைக்காக வாகனங்களில் செல்வோரை போலிசார் லத்தியால் அடித்தும்  வாகனங்களை பறிமுதல் செய்தும்  தண்டனை வழங்கிக் வருகின்றனர்.  பொதுமக்கள் கடைகளுக்கு உணவுப் பொருட்கள் வாங்க சென்றால் கூட போலீசார் அதை தடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் தினக் கூலிகள் , தெரு வியாபாரிகள் ,  வெளிமாநில கூலித் தொழிலாளர்கள் ,  வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் சட்டத்தை மீறி நடப்பவர்களை  போலீசார் கைது செய்யலாம் , ஆனால் அவர்களை தண்டிக்க கூடாது .  சாலையில் நடமாடும் பொது மக்களை அடித்து துன்புறுத்த கூடாது என  தமிழக உள்துறைக்கும்  மற்றும் காவல்துறை டிஜிபிக்கும்  உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார் ,   இந்த மனு நேற்று நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் ஆர் சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது . இந்நிலையில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மற்றும் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் , அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் ஜூம் வாட்ஸ்அப் என்ற ஆப் மூலம் விசாரணையில் பங்கேற்றனர். (  இந்தியாவிலேயே நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விசாரணையில் வழக்கறிஞர்கள் ஆஜரானது அதுவே முதன்முறையாகும் ) இந்நிலையில் நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் பதிலளிக்கும்போது , 

 எந்த  விதி மீறல்களும் நடைபெறவில்லை அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் பொதுமக்களை போலீசார் தடுப்பதில்லை .  இதுவரை ஊரடங்கு மீறியதாக 14, 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன .  13 ஆயிரத்து 660 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன ,  5 லட்சத்து  9030 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது ,  முறையான நடவடிக்கை எடுத்து வருகிறோம் .  மனுதாரர் பொதுவாக குற்றம் சாட்டுகிறார் என்றார் .  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் குறிப்பிட்ட உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை ,  ஆனாலும் நடுநிலையான அணுகுமுறையை போலீசார் கையாள வேண்டும் .  மக்களின் அத்தியாவசிய தேவையை போலீசார் கருத்தில் கொள்ள வேண்டும் .  அரசியலமைப்பு சட்டம் வழங்கும் பிரிவு 21ன் படி மக்களின் வாழும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது .  மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் மக்கள் நியாயமான காரணங்களுக்காக வெளியில் செல்ல நேரும்போது மக்களுக்கு உரிய ஏற்பாடுகளை அரசு செய்து தர வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு  தள்ளிவைத்தனர் .

click me!