திமுகவுக்கு 50 ஓட்டு.. பாஜகவுக்கு 350 ஓட்டு.. வட மாநிலத்தவர் முன்னிலையில் புலம்பிய அமைச்சர்..!

By Asianet TamilFirst Published May 28, 2021, 9:18 AM IST
Highlights

துறைமுகம் தொகுதியில் நீங்கள் (வட மாநிலத்தவர்) வசிக்கும் பகுதியில் 50 வாக்குகள்தான் திமுகவுக்கு கிடைத்தது. ஆனால், பாஜகவுக்கு 300, 350 வாக்குகள் கிடைத்தன என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆதங்கத்துடன் பேசினார்.
 

மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை மெட்ரோ சார்பாக உணவு வழங்கும் நிகழ்ச்சியில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பி.கே.சேகர்பாபு பேசுகையில், “ நீங்கள் எல்லோரும் உங்கள் வளர்ச்சிக்கு வளமான வாழ்வுக்கு பாஜகதான் காரணம் என்று நினைக்கிறீர்கள். ஆனால், இங்குள்ள திராவிட கட்சிகளின் ஆட்சிதான் அதற்குக் காரணம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வர் கூறியதுபோல எல்லோருக்காகவும் பணியாற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம்.


 நீங்கள் துறைமுகம் தொகுதிக்கு வெளியே இருந்தாலும், இந்தத் தொகுதியில்தான் வாக்களிக்கிறீர்கள். 2014 தேர்தலில் தயாநிதி மாறன் மத்திய சென்னையில் போட்டியிட்டபோது அவருக்காகப் பணியாற்றினேன். அப்போதும் நீங்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நான் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டேன். அப்போதும் உங்கள் ஓட்டு எங்களுக்குக் கிடைக்கவில்லை. 2016-இல் தேர்ந்தெடுக்கப்பட்டு உங்களுக்காகவும் சேர்த்து பணியாற்றினேன். நீங்கள் வீடு உள்பட எந்தக் கட்டுமானத்தை மேற்கொண்டாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றி இருக்கிறேன்.
2019-ஆம் ஆண்டில் தயாநிதி மாறன் எம்.பி.யானார். அப்போதும் நீங்கள் குடியிருக்கும் பகுதிகளிலிருந்து எங்களுக்கு வாக்குகள் கிடைக்கவிலை. என்றாலும் நானும் தயாநிதி மாறனும் இணைந்து பணி மேற்கொண்டோம். 2014, 2016, 2019ஐ தாண்டி இப்போது நடந்த முடிந்த தேர்தலிலாவது வாக்களிப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இப்போதும் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் எங்களுக்கு வாக்குகள் வரவில்லை. சரியாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் வசிக்கும் பகுதியில் 50 வாக்குகள்தான் எங்களுக்குக் கிடைத்தது. ஆனால், பாஜகவுக்கு 300, 350 வாக்குகள் கிடைத்தன.
முன்பு வாக்குச்சீட்டில் தேர்தல் நடந்தபோது, வாக்குச் சீட்டுகளை எல்லாம் ஒன்றாகக் கொட்டி பிறகு எண்ணுவார்கள். அதனால், எந்தப் பகுதியில் வாக்குகள் கிடைத்தன என்பது தெரியாது. ஆனால். இப்போது அப்படி இல்லை. எல்லாம் கணினிமயமாகிவிட்டது. ஒரு பட்டனை தட்டினால், யார் யாருக்கு எந்தப் பகுதியில் ஓட்டு கிடைத்தது என்பது தெரிந்துவிடும். உங்கள் பகுதியில் எவ்வளவு வாக்கு கிடைத்தது என்று ஆராய்ந்தபோது வாக்குகள் கிடைக்கவில்லை. பராவாயில்லை. நீங்கள் எவ்வளவு புறக்கணித்தாலும் உங்களுக்காக நாங்கள் பணியாற்றுவோம். திருக்குறளில் சொன்னதுபோல ‘இன்னார் செய்தாரே ஒருத்தர், அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என்பதற்கேற்ப பணியாற்றுவோம். உங்களை எல்லாம் நாங்கள் வேற்று மாநிலத்தவராகப் பார்க்கவில்லை. இந்த மண்ணைச் சேர்ந்தவர்களாத்தான் பார்க்கிறோம்” என்று சேகர் பாபு பேசினார். 

click me!