சென்னை கள நிலவரம்..! திமுகவிற்கு ஷாக் கொடுக்கும் 5 தொகுதிகள்..!

By Selva KathirFirst Published Mar 20, 2021, 11:02 AM IST
Highlights

தமிழகத்திலேயே திமுகவிற்கு முழு அளவில் ஆதரவு உள்ளதாக கூறப்படும் சென்னையில் 5 தொகுதிகளின் நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது.

தமிழகத்திலேயே திமுகவிற்கு முழு அளவில் ஆதரவு உள்ளதாக கூறப்படும் சென்னையில் 5 தொகுதிகளின் நிலவரம்வேறு மாதிரியாக உள்ளது.

ஆர்.கே.நகர்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் ஜே.ஜே.எபிநேசர் களம் இறக்கப்பட்டுள்ளார். இதே போல் அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் ராஜேஸ் களம் இறங்கியுள்ளார். கடந்த 1996க்கு பிறகு இங்கு ஒரு முறை கூட திமுக வென்றது இல்லை. சென்னையை பொறுத்தவரை அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் தொகுதி ஆர்.கே.நகர்.

இதனால் தான் இந்த தொகுதியில் ஜெயலலிதா இரண்டு முறைபோட்டியிட்டு வென்றார். தற்போதும் கூட இந்த தொகுதியில் அதிமுகவே செல்வாக்குடன் உள்ளது. கடந்த இடைத்தேர்தலில் தினகரன் வென்றாலும் அதிமுக 2ம் பிடித்தது. ஆனால் திமுக டெபாசிட்டை பறிகொடுத்தது. அந்த வகையில் இந்த முறையும் ஆர்.கே.நகரில் திமுகவிற்கு மிக கடுமையான போட்டியே நிலவுகிறது.

ராயபுரம்

அமைச்சர் ஜெயக்குமாரின் சொந்த தொகுதி ராயபுரம். இங்கு பட்டி தொட்டி எங்கும் அமைச்சர் பிரபலம். தொகுதியை தனது சொந்த ஊரைப் போல் பார்த்துக் கொள்வதால் ஜெயக்குமாருக்கு இங்கு எப்போதுமே ஏறுமுகம் தான். கடந்த 1991ம் ஆண்டு முதல் ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் போட்டியிட்டு வருகிறார். 1996ம் ஆண்டு மட்டுமே இந்த தொகுதியில் அவர் தோல்வி அடைந்துள்ளார்.

மற்ற அனைத்து தேர்தல்களிலும் ஜெயக்குமாரே வென்றுள்ளார். தற்போது ஜெயக்குமாரை எதிர்த்து ஐ ட்ரீம் மூர்த்தி களம் இறக்கப்பட்டுள்ளார். ராயபுரத்தில் ஜெயக்குமாருக்கு எதிராக கே.பி.சங்கரை களம் இறக்க முயற்சி நடைபெற்றது. ஆனால் ஜெயக்குமாரை எதிர்க்க சங்கர் தயங்கியதால் ஐ ட்ரீம் மூர்த்தி வேட்பாளர் ஆனார். அமைச்சர் அந்தஸ்து உள்ள தொகுதி என்பதால் இங்கு வெற்றிக்கொடி ஜெயக்குமாருக்குத்தான் என்கிறார்கள்.

ஆலந்தூர்

ஆலந்தூர் தொகுதியில் திமுக சார்பில் தாமோ அன்பரசனும், அதிமுக சார்பில் வளர்மதியும் களம் இறங்கியுள்ளனர். கடந்த முறை தேர்தலில் தோல்வி அடைந்த காரணத்தினால் அமைச்சர் பதவியை வளர்மதி இழக்க நேரிட்டது. இதே போல் கடந்த முறை ஆலந்தூரில் வெற்றி பெற்றாலும் திமுக ஆட்சிக்கு வராத காரணத்தினால் அன்பரசனால் அமைச்சராக முடியவில்லை. அந்த வகையில் இரண்டு அமைச்சர்கள் என்கிற அந்தஸ்துடன் ஆலந்தூர் சென்னையில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் கடந்த முறை வெற்றி பெற்ற பிறகு தொகுதிப்பக்கமே தலை காட்டாதது அன்பரசனுக்கு பின்னடைவாக உள்ளது. அதே சமயம் தடாலடி அரசியலால் ஆலந்தூரில் வளர்மதி முன்னிலையில் உள்ளார்.

எழும்பூர்

சென்னை எழும்பூர் தொகுதியை பொறுத்தவரை திமுக வேட்பாளர் பரந்தாமன் – அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழம் சார்பில்  இரட்டை இலை சின்னத்தில் ஜான்பாண்டியன் களம் இறங்கியுள்ளார். தேர்தல் பணிகளில் ஆரம்பம் முதலே ஜான்பாண்டியன் தரப்பு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அதே சமயம் திமுகவில் சிட்டிங் எம்எல்ஏவை புறக்கணித்துவிட்டு பரந்தாமனுக்கு எழும்பூரில் சீட் கொடுக்கப்பட்டிருப்பது உள்ளூர் கட்சிக்காரர்கள் இடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் பரந்தாமனும் முழுக்க முழுக்க மாவட்டச் செயலாளர் சேகர் பாபுவை நம்பியே களத்திற்கு வந்துள்ளார்.

வேட்பாளர் அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு பிறகு தான் தேர்தல் அலுவலகத்தையே எழும்பூரில் திமுக திறந்துள்ளது. தற்போது வரை பிரச்சாரத்திற்கே திமுக வேட்பாளர் பரந்தாமன் செல்லவில்லை. ஆனால் ஜான்பாண்டியன் தரப்பு சத்தமே இல்லாமல் தொகுதியில் பாதியை இதுவரை கவர் செய்துவிட்டார்கள். அந்த வகையில் எழும்பூர் தொகுதியில் ஜான் பாண்டியன் முன்னிலையில் உள்ளார்.

மதுரவாயல்

மதுரவாயல் தொகுதியும் அமைச்சர் அந்தஸ்து உள்ள தொகுதி. துணை மேயராக இருந்தது முதல் தற்போது அமைச்சராகியுள்ளது வரை மதுரவாயல் தொகுதியின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் பெஞ்சமின். கடந்த முறை செலவே செய்யாமல் மதுரவாயல் தொகுதியில் இவர் வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி என்பதால் மதுரவாயலில் தேர்தல் வியூகத்தை பெஞ்சமின் மாற்றியுள்ளார்.

அத்தோடு சென்னையில் வேறு எந்த தொகுதியிலும் இல்லாத வகையில் மதுரவாயலில் பணம் பாய்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு திமுக வேட்பாளரால் ஈடுகொடுக்கமுடியவில்லை. மதுரவாயலில் மநீம சார்பில் போட்டியிடும பத்மபிரியா புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களை கவர்ந்து வருகிறார். இதனால் திமுகவின் வாக்குகள் பிரிந்து மறுபடியும் பெஞ்சமின் வெற்றி பெறுவார்ககள் என்கிறார்கள்.

click me!