வழக்கம் போல் திமுக ஒத்துழைப்பு இல்லை..! களத்தில் கதறும் சிறுத்தைகள்..!

By Selva KathirFirst Published Mar 20, 2021, 10:49 AM IST
Highlights

கூட்டணியில் 6 தொகுதிகளை பெற்றுள்ள நிலையில் தேர்தல் களத்தில் திமுக நிர்வாகிகள் கண்டுகொள்ளாத சூழல் நிலவுவதால் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கூட்டணியில் 6 தொகுதிகளை பெற்றுள்ள நிலையில் தேர்தல் களத்தில் திமுக நிர்வாகிகள் கண்டுகொள்ளாத சூழல் நிலவுவதால் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

திமுக கூட்டணியில் விசிகவிற்கு, காட்டு மன்னார்கோவில், செய்யூர், வானூர், திருப்போரூர், அரக்கோணம், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் விசிக சார்பில் சிந்தனைச் செல்வன் போட்டியிடுகிறார. செய்யூர் தொகுதியில் பனையூர் பாபு விசிக வேட்பாளர் ஆகியுள்ளார். வானூரில் வன்னியரசு களம் இறங்கியுள்ளார். திருப்போரூர் தொகுதியில் எஸ்.எஸ்.பாலாஜி விசிக வேட்பாளராக போட்டியிடுகிறார். நாகையில் விசிக சார்பில் ஆளூர் ஷாநவாஸ் களம் இறங்கியுள்ளார். வேட்பாளர் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியுள்ளது.

ஆனால் தற்போது வரை விசிக வேட்பாளர்களில் பலர் முழு அளவிலான பிரச்சாரத்தை தொடங்கவில்லை. இதே போல் தேர்தல் அலுவலகம் போன்ற பணிகளிலும் விசிக வேட்பாளர்களிடம் சுணக்கமான நிலையே காணப்படுகிறது. இதற்கு காரணம் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக நிர்வாகிகள் கண்டுகொள்ளாததே என்கிறார்கள். வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு தொகுதிக்கு சென்ற நிலையில் முதலில் மாவட்டச் செயலாளர்களை சந்திக்க சென்றுள்ளனர். ஆனால் ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே விசிக வேட்பாளர்களை வரவேற்றதாக சொல்கிறார்கள்.

ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் தற்போது வரை விசிக வேட்பாளர்களை சந்திக்க கூட இல்லை என்கிறார்கள். இதே போல் வேட்பு மனு தாக்கலின் போது விசிக வேட்பாளர்களுடன் வர திமுக மாவட்டச் செயலாளர்கள் மறுத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். மேலும் திமுக மாவட்டச் செயலாளர்கள் தங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் கூட்டணி கட்சிவேட்பாளர்களின் தொகுதிப்பக்கம் வருவதே இல்லை என்கிறார்கள். அதிலும் விசிக வேட்பாளர்கள் தொகுதி என்றால் திமுக நிர்வாகிகள் பாராமுகமாகவே உள்ளனர் என்று கூறப்படுகிறது.

பணம் உள்ள சில விசிக வேட்பாளர்கள் லோக்கல் திமுக பிரமுகர்களை கையில் போட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். ஆனால் வன்னியரசு, ஆளுர் ஷானவாஸ் போன்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். விசிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் அவர்களுக்கு சிறிதும் தொடர்பு இல்லாத தொகுதிகள். எனவே அங்கு எப்படி பிரச்சாரத்தை ஆரம்பிப்பது, எப்படி பூத் கமிட்டி போடுவது என்கிற விஷயங்களை கூட தொடங்க முடியாமல் திமுக நிர்வாகிகளுக்காக காத்திருக்த் தொடங்கியுள்ளனர்.

click me!