
தமிழகத்தில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சுகாதாரத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்மக்காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்துவரும் போதிலும் டெங்கு காய்ச்சலுக்கு நேரும் பலி எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான சிறந்த மருந்தாக அறியப்படும் நிலவேம்பு கசாயம் தற்போது பலனளிக்காத நிலையில், பப்பாளி இலைச்சாறு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் குடிக்கும் நல்ல தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தி ஆவதால், மக்களின் குடிநீரை பரிசோதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
சுத்தமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதிசெய்யும் நோக்கில், கிராமப் பகுதிகளில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சுகாதாரத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக பொதுச் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கி வரும் சிறப்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.