ராஜ கண்ணப்பனை துறை மாற்றுவது தீர்வாகி விடுமா? மார்க். கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி!!

Published : Apr 01, 2022, 06:41 PM IST
ராஜ கண்ணப்பனை துறை மாற்றுவது தீர்வாகி விடுமா? மார்க். கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி!!

சுருக்கம்

அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தது வன்கொடுமை தடுப்பு சட்டக் குற்றம் என்றும் அந்தச் சட்டத்தின்படி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தது வன்கொடுமை தடுப்பு சட்டக் குற்றம் என்றும் அந்தச் சட்டத்தின்படி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ராஜகண்ணப்பன், அண்மைக்காலமாக தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம், அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்புகள் வாங்குவதற்கு டெண்டர் விட முடிவு செய்யப்பட்டு அதில் 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்கிற கடும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இது அம்பலமானதும் அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தின் மூலம் மட்டுமே தீபாவளி இனிப்புகள் வாங்கப்பட வேண்டும் என்று அனைத்து அரசு துறையினருக்கும் தமிழக அரசு உத்தரவிடும் நிலையும் ஏற்பட்டது. இது முதல் சர்ச்சை. இதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ராஜகண்ணப்பனின் கட்டுப்பாட்டில் இருந்த சென்னை துணை போக்குவரத்து ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது.

அதில், கட்டுக் கட்டாக 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நடராஜன் திருநெல்வேலிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். ஆனால் அந்த அதிகாரி மீது அமைச்சர் ராஜகண்ணப்பன் துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது 2வது சர்ச்சை. இந்த நிலையில் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கினார் அமைச்சர் ராஜகண்ணப்பன். முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக ராஜகண்ணப்பன் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக ராஜேந்திரன் கடந்த 28 ஆம் தேதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரம் ஆன நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ராஜ கண்ணப்பனை போக்குவரத்து துறையிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றி உத்தரவிட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் முதல்வரின் இந்த நடவடிக்கை சர்ச்சையை கிளப்பியுள்ளது. சாதியைச் சொல்லி திட்டிய அமைச்சரை பதவி நீக்கம் செய்யாமல் சமூகநீதியைக் காக்கும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றுவதா? என்று எதிர் கட்சிகள் கண்டனமும் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ராஜ கண்ணப்பனை துறை மாற்றுவது மட்டுமே தீர்வாகி விடுமா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் ராஜ கண்ணப்பன் விவகாரத்தில் முதலமைச்சர் உடனே கவனம் செலுத்தியது பாராட்டுக்குரிய செயல். ஆனால், ராஜ கண்ணப்பனை துறை மாற்றுவது மட்டுமே தீர்வாகி விடுமா? அவர் செய்தது வன்கொடுமை தடுப்பு சட்டக் குற்றம். அந்தச் சட்டத்தின்படி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிடிஓவிற்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!