பாஜகவை ஒழித்தால்தான் நாயுடு தூங்குவார்போல..? ஆந்திர முதல்வரின் அடுத்த அதிரடி

First Published Mar 17, 2018, 11:55 AM IST
Highlights
chandrababu naidu initiates national level third front


தேசிய அளவில் மூன்றாவது மாற்று சக்தியை உருவாக்கும் முயற்சியில், பாஜக கூட்டணியிலிருந்து அதிரடியாக விலகிய சந்திரபாபு நாயுடு தீவிரமாக இறங்கியுள்ளார். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய சந்திரபாபு நாயுடு, பாஜகவை வீழ்த்தியே தீர வேண்டும் என்கிற உறுதியில் மூன்றாவது அணி முயற்சியில் இறங்கியுள்ளார்.

2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், குஜராத், இமாச்சல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி வென்று ஆட்சி நடத்தி வருகிறது. 

அடுத்ததாக கர்நாடகாவை கைப்பற்ற பாஜக முயற்சி செய்துவருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த, பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளை இணைத்து வலுவான கூட்டணியை அமைக்க காங்கிரஸ் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

ஆனால், தற்போது பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது மாற்று அணி அமைக்கும் முயற்சிகளும் மும்முரமாக நடந்துவருகின்றன. அண்மையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மூன்றாவது அணிக்கான முயற்சிகளை முன்னெடுத்தார். அவருக்கு மம்தா பானர்ஜி, இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி, பாஜகவை கடுமையாக எதிர்க்க தொடங்கியிருக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் மூன்றாவது அணிக்கான முன்னெடுப்பை தொடங்கியுள்ளார். பாஜக மீது கடுமையான அதிருப்தியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மக்களவை தேர்தலுக்கான மூன்றாவது அணியை அமைக்க தீவிர முயற்சிகளை தொடங்கியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று 11 கட்சிகளுடன் சந்திரபாபு நாயுடு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. சரத் பவார் (சோஷியலிஸ்ட் காங்கிரஸ்), மம்தா பானர்ஜி (திரிமுணால் காங்கிரஸ்), மாயாவதி (பிஎஸ்பி), ஸ்டாலின் (திமுக), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி), ஃபரூக் அப்துல்லா (நேஷனல் கான்பரன்ஸ்), அர்விந்த் கேஜ்ரிவால் (ஆம் ஆத்மி), நவீன் பட்நாயக் (பிஜேடி), ஓம் பிரகாஷ் சவுதாலா (இந்தியன் நேஷனல் லோக்தள்), அசோம் கணபரிஷத் (ஏஜிபி) ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். 

இந்த 3வது அணியில் மேலும் சில கட்சிகள் அங்கம் வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3வது அணியின் முதல் மாநாடு வரும் ஏப்ரல் மாதம் அமராவதியில், சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற உள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முக்கிய மூத்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.
 

click me!