
ஆந்திராவில் பரம வைரியான காங்கிரசுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி சேர உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுநாள் வரை காங்கிரசை கடுமையாக எதிர்த்து வந்த சந்திரபாபு நாயுடு திடிரென அந்த கட்சியுடன் சேர்ந்தது அரசியல் லாபத்திற்கு தான் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனர். மேலும் தெலுங்கு தேசம் கட்சி உருவானதே காங்கிரசை எதிர்த்து தான் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
மேலும் ஆந்திராவை இரண்டாக பிரித்த காங்கிரசுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி அமைப்பது சந்தர்ப்பவாதம் என்றும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் விரைவில் ஆந்திரா வர உள்ள ராகுல் காந்தி – சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த பொதுக்கூட்டத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ள அதே நேரத்தில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இது குறித்து அமராவதியில் கூடி சந்திரபாபு நாயுடு தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியாவில் எதிர்கட்சிகளே இருக்க கூடாது என்கிற நிலைப்பாட்டுன் மோடி – அமித் ஷா கூட்டணி செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
மேலும் ஒவ்வொரு கட்சியையும் விழுங்கு எதிர்கட்சி இல்லா இந்தியாவை உருவாக்க மோடி –ஷா கூட்டணி செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் வலுவாக இருந்தால் தான் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால் தான் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தெலுங்கு தேசம் செயல்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.