
பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்ததும் போதும், தினகரன் தரப்புக்கும் எதிர்தரப்பான பழனிச்சாமி தரப்புக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
திமுகவுடன் இணைந்து ஆட்சியைக் கலைக்க நினைப்பதாக பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் விமர்சித்துவரும் நிலையில், சசிகலாவால் கொடுக்கப்பட்ட முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முடிந்தால் அந்த பதவியை எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு மீண்டும் பிடிக்க பழனிச்சாமி தயாரா? என தினகரன் சவால் விடுத்துள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், நம்பிக்கை வாக்கெடுப்பு என்றாலே பழனிச்சாமியும் அமைச்சர்களும் பயந்து நடுங்குவதாக விமர்சித்தார்.
தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக நினைப்பவர்கள், சசிகலாவால் வழங்கப்பட்ட முதல்வர் பதவியை பழனிச்சாமியும் அமைச்சர் பதவிகளை மற்றவர்களும் ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏக்களைக் கூட்டி அவர்களின் ஆதரவுடன் அந்த பதவியை பிடிக்கட்டும் எனவும் அதன்பிறகு பழனிச்சாமி முதல்வராகவும் பன்னீர்செல்வம் உட்பட எத்தனை துணை முதல்வர்கள் வேண்டுமானாலும் இருக்கட்டும் என சவால் விடுத்தார். அந்த சவாலை கிண்டலாக விடுத்தார் தினகரன்.