
அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க நினைப்பவர்கள் காலச்சக்கரத்தில் சிக்கி அழிந்துபோவார்கள் என முதல்வர் பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கருப்பட்டி பாளையத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய பழனிச்சாமி, அதிமுக எனும் கோட்டையை எந்த சக்தியாலும் நெருங்க முடியாது எனவும் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு செயல்பட்டு வரும் அதிமுக அரசை கலைக்க நினைப்பவர்கள் காலத்தின் சக்கரத்தில் சிக்கி அழிந்துபோவார்கள் எனவும் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க திமுகவை சிலர் நம்பிக்கொண்டிருப்பதாகவும் ஆட்சியைக் கலைத்துவிடலாம்; கட்சியை உடைத்துவிடலாம் என்ற நினைப்பில் சேராதவர்களோடு சேர்ந்திருக்கின்றனர் எனவும் தினகரனை விமர்சித்தார். கட்சி மீது சற்றும் பாசமில்லாத தினகரன், ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் தினகரன் என்றும் அதனால் அவரிடமிருந்து அதையெல்லாம் நினைக்க முடியாது எனவும் தெரிவித்தார். அதனால் அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் ஜெயலலிதாவின் ஆன்மா தண்டனை கொடுக்கும் என பேசினார்.
மக்களுக்குத் தேவையான திட்டங்கள் அனைத்தையும் அரசு செயல்படுத்திக் கொண்டிருப்பதால், அரசின் மீது என்ன குறை கூறுவது என தெரியாமல் போராட்டங்களின் மூலம் அரசிற்கு கலங்கம் கற்பிக்க நினைக்கின்றனர்; ஆனால் அது ஒருபோதும் நடக்காது என திமுகவை தாக்கிப் பேசினார்.