
ஜுலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த்தை ஆதரிக்கும்படி திமுக செயல்தலைவர் ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாடு தொலை பேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டார்.
வரும் ஜுலை 25 ஆம் தேதியுடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து வரும் 17 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பீஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்களிடம் தொலை பேசியில் தொடர்புகொண்டு ராம்நாத் கோவிந்த்துக்கு .ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டார்.
திமுகவுக்கு 89 எம்எல்ஏக்களும், 4 மாநிலங்களவை உறுப்பினர்களும் இருப்பதால் அவர்களது ஆதரவு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என எதிர்பாக்கப்படுகிறது, நாளை டெல்லியில் நடைபெறவுள்ள எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.