
மதச்சார்பின்மை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய இணையமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே, மக்களவையில் மன்னிப்பு கோரினார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, மதச்சார்பின்மைவாதிகள், முற்போக்காளர்கள் என கூறிக்கொள்பவர்கள், உண்மையில் தங்கள் பெற்றோர் மற்றும் தங்கள் ரத்தத்தின் அடையாளம் இல்லாதவர்கள். இதுபோன்ற அடையாளம் மூலம்தான் ஒருவர் சுயமரியாதையை பெற முடியும். அரசியல் சாசனத்தில் மதச்சார்பின்மை என்ற வாசகத்தை மாற்ற வேண்டும். அதற்கான முயற்சியில் பாஜக ஈடுபடும் என அவர் பேசியிருந்தார்.
பாஜகவை சேர்ந்த மத்திய இணையமைச்சரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தன. நாடாளுமன்றத்திலும் இதுதொடர்பான எதிர்ப்பை தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
அரசியல் சாசனத்தின் மீது பாஜக தாக்குதல் நடத்துவதாகவும் அரசியல் லாபத்திற்காக பாஜக பொய் கூறுவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்காகா மன்னிப்பு கோருவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை எனவும் அனந்த்குமார் ஹெக்டே தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய அனந்த்குமார் ஹெக்டே, எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அரசியல் சாசனத்தையும் நாடாளுமன்றத்தையும் நான் மிகவும் மதிக்கிறேன். அரசியல் சாசனம் மிகவும் உயர்ந்தது மற்றும் புனிதமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு குடிமகனாக அரசியல் சாசனத்திற்கு எதிராக நான் செயல்படமாட்டேன். எனினும் எனது கருத்து தொடர்பாக மன்னிப்பு கோருவதில் எனக்கு தயக்கம் இல்லை என தெரிவித்தார்.