உணவில்லாமல் பசியோடு உறங்கச் செல்லும் 20 கோடி மக்களை சிந்திக்கத் தவறிய மத்திய அரசு... சீறும் சீமான்..!

By vinoth kumarFirst Published Mar 30, 2020, 11:44 AM IST
Highlights

நாடுதழுவிய மிகப்பெரிய ஊரடங்கைப் பிறப்பிப்பதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்யத் தவறிவிட்டது‌ என்பது வெளிப்படையானது.

சாதாரண நாட்களிலேயே ஒவ்வொரு நாளும் 20 கோடிக்கும் மேலான மக்கள் இரவு உணவில்லாமல் பசியோடு உறங்கச் செல்லும் அவலநிலையைக் கொண்ட ஒரு நாட்டில், இது போன்றதொரு நெருக்கடி மிகுகாலத்தில் அந்த மக்கள் எவ்வாறு தங்கள் உணவுத்தேவையை நிறைவேற்றிக் கொள்வார்கள்? என மத்திய அரசு சிந்திக்கத் தவறிவிட்டது என சீமான் குற்றம்சாட்டியள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில்;-  கொரோனா நோய்த்தொற்று பரவலினால் நாடு முழுவதும் ஒரே இரவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணிக்கு சென்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் சரக்கு ஏற்றிச்சென்ற ஓட்டுநர்களும் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். பெருநிறுவனங்களில் பணிபுரிவோர்கள் போலல்லாமல் பிற மாநிலங்களுக்கு கூலி வேலைக்குச் சென்ற அடித்தட்டு மக்கள்தான் இந்த ஊரடங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடுதழுவிய மிகப்பெரிய ஊரடங்கைப் பிறப்பிப்பதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்யத் தவறிவிட்டது‌ என்பது வெளிப்படையானது.

பணிக்குச் செல்லும் சாதாரண நாட்களிலேயே ஒவ்வொரு நாளும் 20 கோடிக்கும் மேலான மக்கள் இரவு உணவில்லாமல் பசியோடு உறங்கச் செல்லும் அவலநிலையைக் கொண்ட ஒரு நாட்டில், இது போன்றதொரு நெருக்கடி மிகுகாலத்தில் அந்த மக்கள் எவ்வாறு தங்கள் உணவுத்தேவையை நிறைவேற்றிக் கொள்வார்கள்? என மத்திய அரசு சிந்திக்கத் தவறிவிட்டதன் விளைவே இந்த இக்கட்டான நிலைக்குக் காரணம். தமிழகம் போல அல்லாது பிற மாநிலங்களில் வேலைக்குச் சென்ற தமிழர்களுக்கு அந்த மாநில அரசுகள் எவ்வித வாழ்வாதார உதவிகளும் அளிக்காமல் நிராதரவாய் விட்டதோடு மட்டுமின்றி அங்கிருந்து எவ்வித போக்குவரத்து வசதியும் செய்து தராமல் மாநிலத்தைவிட்டு உடனடியாக வெளியேறுமாறு வலுக்கட்டாயமாக நிர்பந்திக்கப்படுவதாகவும் பல்வேறு மாநிலங்களில் வாழும் தமிழர்களிடமிருந்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாகக் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கும், டெல்லியிருந்து உத்திரப்பிரதேச மாநிலத்திற்கும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் நடந்தே கடந்து செல்லும் அவலநிலையைக் காண்கிறோம். இதுமட்டுமின்றி மராட்டிய மாநிலத்தில் 21.03.2020 அன்று முன்கூட்டியே 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதால் அங்குள்ள பந்தர்பூர் என்னும் ஊரில் கூலி வேலைக்குச் சென்ற 300க்கும் மேற்பட்ட தமிழர்கள், தமிழகத்திற்கு வர முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், மராட்டிய மாநில அரசும் உடனடியாகப் பந்தர்பூரை விட்டு வெளியேறுமாறு கடுமையாக நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்தச் சூழலில் அவர்கள் தமிழகத்திற்கு வருவதற்கு மராட்டிய மாநில அரசு எந்தவித ஏற்பாடும் செய்து கொடுக்கவில்லை என்பது மிகுந்த கவலை தரும் செய்தியாகும். இதுதான் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் நிலையாக உள்ளது.

மாநிலம்விட்டு மாநிலம் சென்றதால் மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள எவ்வித உயிராதார அத்தியாவசிய உதவிகளும் பெற முடியாத இக்கட்டான நிலையில் தமிழர்கள் சிக்கியுள்ளனர். தொடர் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களே கடுமையான மனவுளைச்சலுக்கு ஆளாகும் இச்சூழலில் பிற மாநிலங்களில் குடும்பங்களையும், உறவுகளையும் பிரிந்து வேலையும், உணவும் இன்றி அடைப்பட்டுக் கிடக்கும் தமிழர்களை மீட்டு அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமையாகும். உத்திரபிரதேச மாநில அரசு பல்வேறு மாநிலங்களுக்குப் பணிக்குச் சென்ற அம்மாநில மக்களை மீட்பதற்காக ஆயிரம் பேருந்துகளை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது கவனிக்கதக்கது.

நோய்த்தொற்று பரவலைப் பொறுத்து ஊரடங்கு உத்தரவு இன்னும் நீட்டிக்கப்படும் வாய்ப்பிருப்பதால் நீண்டநாட்களுக்குத் தமிழர்கள் அங்கு வாழமுடியாத நிலை உள்ளது. எனவே, உணவு, உறைவிடம் இன்றி அச்சத்தோடு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தமிழர்களைக் கண்டறிந்து பாதுகாப்பு வசதி செய்யப்பட்ட பேருந்துகள் மூலமாக மீட்டுக்கொண்டுவர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

click me!