தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வி.. புள்ளி விவரத்துடன் வெளிச்சம் போட்டு காட்டும் ப.சிதம்பரம்..!

By vinoth kumarFirst Published Mar 18, 2021, 5:19 PM IST
Highlights

இந்தியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். 

இந்தியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் கொரோனா 2ம் அலை ஏற்பட்டுவிட்டதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் சில கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று குறித்து ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப. சிதம்பரம் அவரது டுவிட்டர் பக்கத்தில்;- 5.9 கோடி கொரோனா தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். ஆனால், இந்தியர்களுக்கு இதுவரை 3 கோடி கொரோனா தடுப்பூசி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பதில் ஏமாற்றமடைகிறேன். இந்தியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் விகிதம் அதிகரித்து வருகிறது. இது குறித்து யாரேனும் சிந்திக்கிறீர்களா?

தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசிக்கு மத்தியிலுள்ள போட்டியில் கொரோனாதான் மக்களை வெல்கிறது. மக்களுக்கு தேவைக்கேற்ப கொரோனா தடுப்பூசிகளைப் போட வேண்டும். கொரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு போன்ற அதிகாரத்துவ தடைகளை விலக்க வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

click me!