பாஜகவிற்கு பலத்த அடி... அப்படியெல்லாம் உத்தரவு போட முடியாதுன்னு உயர் நீதிமன்றம் கறார்...!

Published : Jul 01, 2021, 03:19 PM IST
பாஜகவிற்கு பலத்த அடி... அப்படியெல்லாம் உத்தரவு போட முடியாதுன்னு உயர் நீதிமன்றம் கறார்...!

சுருக்கம்

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கூடாது என தமிழக பாஜகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ள உத்தரவு பேரிடியாக  அமைந்துள்ளது.

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கூடாது என தமிழக பாஜகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ள உத்தரவு பேரிடியாக  அமைந்துள்ளது. 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. அதனையடுத்து, மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவியேற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்றிய அரசு என்றே அழைத்து வருகின்றனர். தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிலும் மத்திய அரசு, ஒன்றிய அரசு என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது.

 மத்திய அரசு என்று அழைக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. ஒன்றிய அரசு என்ற வார்த்தைக்கு எதிராக வழக்கு தொடர்வோம் என்று பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்திருந்தார். இப்படி அழைப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழக அரசின் அலுவல் ரீதியான அறிவிப்புகள், நிகழ்த்தப்படும் உரைகள் போன்ற எல்லாவற்றிலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு என்ற வார்த்தை குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பிய போது, ‘ஒன்றிய அரசு’ என அழைப்பதில் தவறில்லை என்றும் அவ்வாறே தொடர்ந்து அழைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்த தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

 இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்வதையே கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவ்வாறு இருக்கையில் இப்படித்தான் பேச வேண்டும் என எவ்வாறு உத்தரவிட முடியும்? மனுதாரர் கோரும் வகையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இவ்வாறு தான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட இயலாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவு பாஜகவினருக்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என திமுக உடன்பிறப்புக்கள் சோசியல் மீடியாக்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!