அதிகரிக்கும் கொரோனா பீதி... நாடு முழுவதும் கட்டுப்பாடு... 15 கட்டளைகளை வெளியிட்ட மத்திய அரசு!

By Asianet TamilFirst Published Mar 18, 2020, 8:24 AM IST
Highlights

நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், மால்கள், வணிக வளாகங்கள் ஆகியவை மூடப்பட்டுவருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு 15 அம்ச கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
 

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்திவரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் 142 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன. ஏற்கனவே நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், மால்கள், வணிக வளாகங்கள் ஆகியவை மூடப்பட்டுவருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு 15 அம்ச கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


* இதன்படி ஒருவரையொருவர் சந்திக்கும்போது கைகுலுக்கக் கூடாது. கட்டிப் பிடிப்பது, நெருக்கமாக உரையாடுவது ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.
* நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுகின்றன. உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுப் பயிற்சி கூடங்கள் மூடப்படும். மாணவர்கள் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும்.
*  நாடு முழுவதும் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்.
* கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்திகளையும் பீதியையும் நம்பாதீர்கள். வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தேவையற்ற தகவலை பரப்பாமல் அமைதி காப்பது எல்லோருடைய கடமை.
* தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்ற வேண்டும்.
* பெரிய தொழில் நிறுவனங்கள் ஆலோசனை கூட்டங்களை தேவைப்படும்பட்சத்தில் காணொலி காட்சி மூலம் நடத்திகொள்ளலாம்.
* திருமண மண்டபங்களில் புதிதாக எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த அனுமதி கூடாது.
*  ஹோட்டல்கள், விடுதிகளில் சுகாதார நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். கைகழுவ கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
* உள்ளூர் விளையாட்டு போட்டிகள் அனைத்தையும் மறு அறிவிப்பு வரும்வரை ஒத்திவைக்க வேண்டும்.
* பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யக் கூடாது.
* பொதுமக்கள் தேவையில்லாமல் பேருந்து, ரயில்கள், விமானங்களில் பயணம் செய்யக் கூடாது.
* வணிக வளாகங்களில் ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளியில் நடந்து வரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.


* சங்கத்தினர் கூட்டங்கள் நடத்துவதை வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் தவிர்க்க வேண்டும். சந்தைகளில் மக்கள் நெருக்கமாக இருப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.
* எல்லா மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வீடுகளில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், குழந்தைகளிடம் எப்படி பழக வேண்டும் என்பதை மருத்துவமனைக்கு வருவோரிடம் மருத்துவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
* ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது எங்கிருந்து, என்ன பொருட்கள் வாங்குகிறோம் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

click me!