
ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் தமிழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட செப்டம்பர் 22-ம் தேதி முதல் அவர் இறந்த டிசம்பர் 5 வரை நடந்தவற்றை விரிவாக விசாரித்து அறிக்கையை 3 மாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் விசாரணை நடத்தக்கூடாது; சிபிஐ தான் விசாரணை நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதிலும் தற்போதைய முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சிங்கப்பூர் மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் பீலே ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்ததாகக் கூறிய அப்போதைய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவோ மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனோ ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஊடகங்களிடம் தெரிவிக்காதது ஏன்? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசின் மீதும் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.