
பிபின் ராவத் மரணம் தொடர்பாக திராவிடர் கழகத்தின் துணை அமைப்புகள் கொண்டாடியதாக குற்றம் சாட்டிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதன் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிறகு, அதுபற்றி தமிழக அரசை குற்றம் சாட்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டதாக மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பிபின் ராவத் மரணம் தொடர்பாக கொண்டாட்ட பதிவுகளை இட்டோர் ஸ்மைலி பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினரும் இந்து அமைப்புகளும் கூறி வந்தார்கள். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அண்ணாமலையின் புகாருக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எதிர்வினை ஆற்றியிருக்கிறார்.
இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் விபத்தில் மரணம் அடைந்தது குறித்து, திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவித்திருந்தோம். உண்மை இவ்வாறு இருக்க, ‘திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அதிகாரப்பூர்வமான துணை அமைப்புகள் ஜெனரல் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று கொண்டாடி இருக்கிறார்கள்’ என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். எங்கு, எப்பொழுது திராவிடர் கழகம் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று கொண்டாடியது? என்று விளக்கப்படவில்லை என்பதிலிருந்தே, இது பொய்யானது என்பது வெளிப்படையாக உள்ளது.
திராவிடர் கழகத்தின் மீது பொய்யான வகையில் அபாண்டமாக அவதூறு பரப்பி, மக்கள் மத்தியில் திராவிடர் கழகத்தைப்பற்றி மோசமான எண்ணம் உருவாகும் வகையில் அண்ணாமலை செயல்பட்டுள்ளார். இப்படி அவதூறு பரப்பியுள்ள அவர் மீது சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசையும், குறிப்பாகக் காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறோம்.” என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார். .