Tasmac|அடேங்கப்பா ஆச்சரியம்.! தமிழக குடிமகன்கள் திருந்திவிட்டார்களா.? இரு மாதங்களாக சரிந்தது டாஸ்மாக் விற்பனை!

By Asianet TamilFirst Published Dec 15, 2021, 8:28 AM IST
Highlights

தொடக்கத்தில் ரூ. 500 கோடி, ரூ.1000 கோடி என்ற அளவில் மெல்லமாக ஏறிய டாஸ்மாக் விற்பனை, கடந்த 10 ஆண்டுகளில் ஜெட் வேகத்தில் சென்றது. அண்மை காலத்தில் ரூ.30 ஆயிரம் கோடி வரை டாஸ்மாக் விற்பனை நடந்ததாக தகவல்கள் வெளி வரத் தொடங்கின.  

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை எப்போதும் உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக விற்பனை சரிந்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்துக்கு வருவாய் அள்ளித் தருவதில் டாஸ்மாக் விற்பனையும் உண்டு. 2003-ஆம் ஆண்டில் மதுபான சில்லறை விற்பனையை டாஸ்மாக் மூலம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக தமிழகத்தில் குக்கிராமம் முதல் பெரிய நகரங்கள் வரை டாஸ்மாக் கடைகள் முளைத்தன. டாஸ்மாக் பாட்டிலை எடுத்துக்கொடுக்க பட்டாதாரிகள்கூட ஆர்வமாக வேலைக்கு சேர்ந்தார்கள். அப்போது தொடங்கிய டாஸ்மாக விற்பனையின் கிராஃப் ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது, தொடக்கத்தில் ரூ. 500 கோடி, ரூ.1000 கோடி என்ற அளவில் மெல்லமாக ஏறிய டாஸ்மாக் விற்பனை, கடந்த 10 ஆண்டுகளில் ஜெட் வேகத்தில் சென்றது. அண்மை காலத்தில் ரூ.30 ஆயிரம் கோடி வரை டாஸ்மாக் விற்பனை நடந்ததாக தகவல்கள் வெளி வரத் தொடங்கின.

 

குறிப்பாக, தீபாவளி, ஆங்கிலப் புத்தாண்டு போன்ற நாட்களில் மட்டும் விற்பனைக்கு இலக்கு வைத்து அந்த இலக்கையும் கச்சிதமாக அடைந்து வந்ததது டாஸ்மாக். கடந்த மாதம் தீபாவளி பண்டிகையையும் தொடர் விடுமுறையையும் பயன்படுத்தி தீபாவளியன்று ரூ. 200 கோடி, அடுத்த நாளில் ரூ.250 கோடி என ரூ.500 கோடிக்கும் லேம் விற்பனையாகும் என டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்திருந்தது. எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றாலும் ரூ.400 கோடி விற்பனையை டாஸ்மாக் எட்டியதாக அதன் வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்து ஆங்கிலப் புத்தாண்டுக்கும் இலக்கு வைத்து விற்பனை ஜரூராக நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தொடர்ந்து டாஸ்மாக் விற்பனை தொடர்ந்து எகிறிக் கொண்டிருப்பாதகவே செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக டாஸ்மாக் விற்பனை குறைந்துவிட்டதாக மாறுப்பட்ட தகவல்கள் வெளி வரத் தொடங்கியுள்ளன. பொதுவாக டாஸ்மாக் கடைகள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 100 கோடி மதிப்பிலான 70 ஆயிரம் பெட்டி பீர் வகைகளும் 1.60 லட்சம் பெட்டி மது வகைகளும் விற்பனையாவது வழக்கம். ஆனால், அக்டோபரில் பீர் பெட்டிகள் 22.74 லட்சம் பெட்டிகளாக குறைந்துள்ளது. நவம்பரில் பீர் விற்பனை 19.94 லட்சம் பெட்டிகளாகவும், மது வகைகள் விற்பனை 52 லட்சம் பெட்டிகளாகவும் மேலும் சரிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான காலத்தில் மெல்லிய தளர்வுகள் இருந்தபோதும்கூட டாஸ்மாக் விற்பனையில் சரிவு ஏற்படவில்லை. ஆனால், தற்போது முழு தளர்வுகள் அமலில் உள்ள நிலையில் டாஸ்மாக்கில் விற்பனை குறைந்துள்ளது. அதுவும் பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள் நிலையில் விற்பனை சரிந்துள்ளது. கொரோனா காலத்துக்குப் பிறகு மக்களின் வாங்கும் திறன் குறைந்த நிலையில், பொதுவாகவே அனைத்துவிதமான விற்பனைகளும் குறைந்தன. ஆனால், டாஸ்மாக் விற்பனை மட்டும் கூடியிருந்தது. இந்நிலையில் டாஸ்மாக் விற்பனை சரிய தொடங்கியுள்ளது. அதுவும் பண்டிகை நாட்களைக் கொண்ட மாதங்களில் விற்பனை குறைந்துள்ளது.

இந்தியாவிலேயே மது விற்பனையில் தமிழகத்தில் அடித்துக்கொல்ள ஆளே இல்லை என்ற நிலை உள்ளது. இந்நிலையில் மது விற்பனை குறைய குடிமகன்கள் திருந்திவிட்டார்களா, குடிப்பதைக் குறைத்துக்கொண்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விரைவில் உயர் ரக மதுபானங்களின் விலையை அதிகரிக்க டாஸ்மாக் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், இன்னும் விறபனை டல்லடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குடியால் பல வீட்டுக் குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன. குடிமகன்கள் எந்த வழியில் குடியை விட்டாலும் அது அவர்களுடைய வீட்டுக்கு மட்டுமல்ல, சமுதாயத்துக்கும் நல்லதுதான். அந்த வகையில் டாஸ்மாக் விற்பனை சரிவை ஆராதிக்கலாம்!


 

click me!