
கார்த்தி சிதம்பரம் நிபந்தனைகளுடன் வெளிநாடு சென்று வர உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதற்கு ப.சிதம்பரத்தின் விசுவாச சிபிஐ., அதிகாரிகளே காரணம் என்று கருத்துகள் கூறப்படுகின்றன.
ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜிக்கு சொந்தமான ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு, விதிகளை மீறி, வெளிநாட்டில் இருந்து 305 கோடி நிதி பெற உதவியதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ., வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. மேலும், அவர் வெளிநாடு செல்வதை தடுப்பதற்காக, லுக் அவுட் நோட்டீஸும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தனது மகளை லண்டன் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும், அதற்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தாம் அவசியம் நாடு திரும்பி விடுவதாகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் கூறியிருந்தார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டிசம்பர் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதிக்குள் வெளிநாடு சென்று திரும்புமாறும், நாடு திரும்பியதும் நீதிமன்றத்தில் தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் குறித்து அடிக்கடி கருத்து வெளியிட்டு வரும் பாஜக., ஆதரவாளரும் ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி, இன்று தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ள கருத்தில்...
உச்ச நீதிமன்றத்தில் பேசப்பட்ட கார்த்தி விஷயமானது, ஒரு உளவியல் மற்றும் விளம்பர ஸ்டண்ட். இந்த இரு விஷயத்திலும் உச்ச நீதிமன்றம், கார்த்திக்கு அனுகூலத்தை அளித்திருக்கிறது. வேறு எந்த வழக்கிலாவது அவர்கள் இப்படி யாரையும் செல்ல அனுமதித்திருக்கிறார்களா? உண்மையில் மல்லையாவை இவ்வாறு தப்பிச் செல்ல அனுமதித்த வகையில் அரசு தவறு செய்தது என்று தான் சொல்ல வேண்டும். இது நீதிமன்றத்தின் பாரபட்சத் தன்மையைத்தான் காட்டுகிறது... என்று தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இதே போல், பாபா சோர், பேடா சோர் என, தந்தை திருடன், மகன் திருடன் எனும் வார்த்தைகளை பயன்படுத்தும் சுப்பிரமணியம் சுவாமி, இவர்கள் இருவர் மீதான வழக்குகள் தாமதமாவதற்குக் காரணம் சிபிஐ.,தான் என்று குற்றம் சாட்டுகிறார். எனவே சிபிஐ விவகாரத்தில் மோடி தனது நடவடிக்கையை மேற்கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது என்று கூறுகிறார் சு.சுவாமி.
உண்மையில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதாக, பிரதமர் மோடி வலுவாகக் காட்டுவாரானால், சிபிஐ.,யில் உள்ள ப.சிதம்பரத்துக்கு விசுவாசமான அதிகாரிகள் களை எடுக்கப் பட வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறுகிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.