ஆட்டம் காணும் தஞ்சை அதிமுக..! அமைச்சர் அதிரடியில் கொந்தளிக்கும் ர.ர க்கள்..!

By Selva KathirFirst Published Feb 13, 2020, 12:45 PM IST
Highlights

தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுகவில் ஜாதி அரசியல் கொடி கட்டிப்பறப்பதாக அக்கட்சி தொண்டர்கள் அதிமுக தலைமைக்கு புகார் மேல் புகார்களை அனுப்பி வருகின்றனர்.

2001ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் பாபாநாசம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டவர் துரைக்கண்ணு. மிகவும் எளிமையானவர் பழகுவதற்கு இனியவர் என்கிற காரணத்தினால் அவருக்கு அப்போது அதிமுகவினர் ஒட்டு மொத்தமாக ஆதரவு தெரிவித்தனர். பாபநாசம் தொகுதி கள்ளர்கள் மற்றும் மூப்பனார்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை அதிகம் கொண்டது. அந்த தொகுதியை அப்போது கூட்டணியில் இருந்த தாமக எவ்வளவோ கேட்டும் கொடுக்க மறுத்துவிட்டார் ஜெயலலிதா. ஏனென்றால் பாபநாசம் தொகுதியில் தான் தமாகா நிறுவனர் மூப்பனாரின் சொந்த ஊர் வருகிறது. சொல்லப்போனால் பாபநாசம் மூப்பனாருக்கு சொந்த தொகுதி. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த துரைக்கண்ணுவுக்கு அங்கு சீட் வழங்கினார் ஜெயலலிதா. அவரும் யாரும் எதிர்பாராத வகையில் அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து 2011 தேர்தலிலும் அங்கு துரைக்கண்ணுவுக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போதும் துரைக்கண்ணு வென்றார். இதே போல் 2016 தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கிடைக்க அமோக வெற்றியுடன் அமைச்சராகவும் பதவி ஏற்றார் துரைக்கண்ணு.

இதன் பிறகு துரைக்கண்ணுவின் அரசியல் வாழ்க்கையில் ஏறுமுகம் தான். அதிமுகவின் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் பதவி தேடி வந்தது. இப்போது தான் அமைச்சர் ஜாதிப்பாசத்தை காட்ட ஆரம்பித்ததாக புகார் எழுந்தது. பாபநாசம் தொகுதிகளில் அனைத்து கட்சிகளிலும் கணிசமான அளவில் வன்னியர்கள் உண்டு. எப்போதும் பாபநாசம் தொகுதியை பொறுத்தவரை மூப்பனாம் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் வெற்றி பெற்று வந்தனர். அரசியல் கட்சிகளும் பெரும்பாலும் மூப்பனார் அல்லது கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு தான் போட்டியிடவே வாய்ப்பை வழங்கும். ஆனால் அதனை மீறி வன்னியரான துரைக்கண்ணுவுக்கு முதல் முறையாக வாய்ப்பு கொடுத்த போதே கட்சி பேதமின்றி வன்னியர்கள் ஒன்று சேர்ந்து துரைக்கண்ணுவை வெற்றி பெற வைத்ததாக அப்போதே பேச்சு அடிபட்டது. இது அடுத்தடுத்த தேர்தகளிலும் தொடரவே தனக்கு கட்சிப் பதவி கிடைத்த பிறகு தன்னுடைய ஜாதிப்பாசத்தை அவர் காட்ட ஆரம்பித்துவிட்டதாக கூறுகிறார்கள்.

மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும் தனது ஜாதி என்றால் உடனே பதவி கொடுத்து துரைக்கண்ணு அழகு பார்த்ததாகசொல்கிறார்கள். மேலும் கள்ளர்கள் மெஜாரிட்டியாக உள்ள பகுதிகளிலும் வன்னியர்களுக்கு துரைக்கண்ணு பதவி கொடுத்ததால் ஆங்காங்கே பிரச்சனை வெடித்தது. ஆனால் இவற்றை எல்லாம் தனது செல்வாக்கை கொண்டு வெளியே வராமல் அமைச்சர் பார்த்துக் கொண்டார். ஆனால் தற்போது அமைச்சருக்கு எதிராக ரகசியமாக புகார்கள் ராயப்பேட்டைக்கு சென்று கொண்டிருக்கின்றனவாம்.

click me!