சர்கார் நடிகர் விஜய் மீதும் வழக்கு !! படத்தைப் போட்ட தியேட்டர் மீதும் வழக்கு !!

By Selvanayagam PFirst Published Nov 7, 2018, 8:14 PM IST
Highlights

நேற்று திரைக்கு வந்த சர்கார் திரைப்படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, நடிகர் விஜய், சன் பிக்சர்ஸ் மற்றும் அந்தப் படத்தை திரையிட்ட தியேட்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

பெரும் பரபரப்புக்கிடையே தீபாவளியன்று விஜய் நடித்த சர்கார் படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. வசூலை வாரிக்குவிக்கும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போதுள்ள அரசை காட்சிக்கு, காட்சிக்கு கிழித்து தொங்கவிடும் அளவுக்கு  உள்ளதாக ரசிகர் தெரிவித்தனர்.

சர்கார் படத்தில் ஒரு காட்சியில்  பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸியை எரிப்பது போன்று  காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு  அமைச்சர் கடம்பூர் ராஜு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். வளரும் நடிகரான விஜய் இது போன்ற படங்களில் நடிக்கக் கூடாது என அவர் எச்சரித்தார்.

இந்நிலையில் சென்னை திருப்போரூரில் செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் சி.வி,சண்முகம்,  சர்கார் படத்தில் அரசின் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருப்பது, அரசை அவமதிக்கும் செயல் என குற்றம்சாட்டினார்.

இந்த படத்தில் நடித்த  நடிகர் விஜய், பட தயாரிப்பாளர் மற்றும் படத்தை திரையிட்ட திரை அரங்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.. 

சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காகவே இந்த  காட்சிகள் இருப்பதால் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். மெர்சல் திரைப்படத்துக்கு எச்.ராஜா, தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் புரோமோஷன் செய்ததைப் போல், தற்போது அதிமுக அமைச்சர்கள் சர்கார் படத்துக்கு புரோமோஷன் அளித்து வருவதாக நெட்சன்கள் கலாய்த்து வருகின்றனர்.

click me!