பணம் கொடுக்க ஸ்கெட்ச் போட்ட மாஜி அதிமுக எம்.எல்.ஏ... வேலூரில் வழக்குப்பதிவு செய்த போலீஸ்!

By Asianet TamilFirst Published Apr 24, 2019, 9:00 AM IST
Highlights

தேர்தல் ரத்துக்கு முன்பாக வேலூர் தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், வேலூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்துக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு எப்படி பணம் சப்ளை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக கூட்டணி கட்சியினருடன் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திட்டம் போட்டு கொடுத்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் கடந்த 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க வேலூரில் காட்பாடி பகுதியில் திமுகவினர் தொடர்புடைய இடங்களில் 11.53 கோடி ரூபாய் பிடிபட்டது. இது தொடர்பாக வருமான வரித்துறை அளித்த அறிக்கையின்படி வேலூர்  நாடாளுமன்ற தொகுதி தேர்தலை மட்டும் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. எஞ்சிய 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது.


தேர்தல் ரத்துக்கு முன்பாக வேலூர் தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், வேலூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்துக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு எப்படி பணம் சப்ளை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக கூட்டணி கட்சியினருடன் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த வீடியோ தேர்தல் ரத்து அறிவிப்புக்கு முன்னர் பேசப்பட்டது.  வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டபோதும் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இந்த வீடியோ குறித்து கேள்வி எழுப்பின.
ஆனால், இந்த வீடியோவுக்கு முன்னாள் எம்எல்ஏ கோவி. சம்பத்குமார் மறுப்பு தெரிவித்தார். தனது பேச்சை யாரோ மிமிக்ரி செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர் என்று தெரிவித்தார். இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக வாணியம்பாடி தாசில்தாரும் தேர்தல் அலுவலருமான முருகன் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பது குறித்து பேசிய கோவி.சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறப்பட்டிருந்தது. 
இந்தப் புகாரின் அடிப்படையில் கோவி. சம்பத்குமார் மீது வாணியம்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். 

click me!