
கூவத்தூர் ரிசார்ட்டில் தன்னை கடத்தி அடைத்து வைத்ததாக எம்.எல்.ஏ சரவணன் அளித்த புகாரின் பேரில் கூவத்தூர் போலீசார் சசிகலா மற்றும் எடப்பாடி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 5 ஆம் தேதி சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் என கூறி நூற்றுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைத்தனர்.
இரண்டு நாட்கள் கழித்து ஓ.பி.எஸ் போர்க்கொடி தூக்க அவருக்கு ஆதரவு பெருகியது. இதையடுத்து 4 எம்.எல்.ஏக்கள் தப்பி ஓடி வந்தனர்.
பின்னர் மேலும் சில எம்.எல்.ஏக்கள் வந்தனர். தாங்கள் கடத்தப்பட்டதாக சில எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் புகாரும் அளித்தனர். இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
எம்.எல்.ஏக்கள் யாரும் அடைத்து வைக்கப்படவில்லை என எஸ்.பி முத்தரசி அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அறிக்கை தாக்கல் செய்யபட்ட அன்று மதுரை தெற்கு எம்.எல்.ஏ சரவணன் தப்பி வந்து புகார் அளித்தார்.
இதையடுத்து பிரச்சனை பெரிதாகியது. இந்நிலையில் போலீசார் நேற்று காலை அதிரடியாக கூவத்தூர் ரிசாட்டில் நுழைந்தனர். ஆனால் அவர்களை உள்ளே விடாமல் அமைச்சர்கள், எம்.பிக்கள் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் தன்னை கடத்தி அடைத்து கொலை மிரட்டல் விட்டதாக மதுரை தெற்கு எம்.எல்.ஏ சரவணன் அளித்த புகாரின் பேரில் கூவத்தூர் போலீசார் சசிகலா மற்றும் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்தனர்.
(crime no. 25/17) சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது பிரிவு 342, 343, 365, 363, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவைகள் அனைத்தும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.