டெங்கு, மலேரியா போன்றது என்றும் அதை ஒழிக்க வேண்டுமென்றும் அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இந்த மாநாட்டில் அமைச்சர் சேகர் பாபுவும் பங்கேற்றுள்ளார். திமுக எம்.பி ராசாவும் சானாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருகிறார்.
சனாதனம் குறித்து அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, திமுக எம்.பி. ராசா பேசியது தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் சனாதானம் என்பது டெங்கு, மலேரியா போன்றது என்றும் அதை ஒழிக்க வேண்டுமென்றும் அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இந்த மாநாட்டில் அமைச்சர் சேகர் பாபுவும் பங்கேற்றுள்ளார். திமுக எம்.பி ராசாவும் சானாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருகிறார். இதனால் இவர்கள் மூவரும் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட வேண்டும் என கிஷோர் குமார் என்பவர் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ராசா ஆகியோருக்கு எதிராக கோவாரண்டோ வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்து முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் உதயநிதி மற்றும் திமுக எம்.பி. ராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் அவர்களின் நியமனம் எந்த சட்டத்திற்கும் எதிரானது அல்ல. ஆகையால் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. மேலும் அவர்கள் எந்த விதிமுறை மீறல்களிலும் ஈடுபடவில்லை. பேச்சு விவரங்கள் மனுவில் தெரிவிக்கப்படவில்லை என்றும், அரசியல் காரணத்துக்காக நீதிமன்றத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் வாதிட்டார்.
அமைச்சர் சேகர்பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜோதி, அவர்களின் பேச்சு அல்லது வீடியோ குறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கு என்பது இரு நீதிபதிகள் அமர்வில் தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர்கள் உதயநிதி சேகர் பாபு மற்றும் திமுக எம்.பி. ராசா ஆகியோரது பேச்சு குறித்த ஆதாரங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.