ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி... முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பிற்கு கேப்டன் பாராட்டு...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 5, 2021, 7:27 PM IST
Highlights

எடப்பாடியாரின் இந்த அதிரடி அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டியுள்ளார். 

கூட்டுறவு வங்கி விவசாய பயிர் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் வேளாண் துறைக்கான புதிய அறிவிப்புகளை சட்டமன்றத்தில் வெளியிட்டார். புயல் மற்றும் ஜனவரி மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளான தமிழக விவசாயிகளின் கடன் சுமையை முற்றிலும் குறைத்திடும் விதமாக ரூ.12, 110 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என எடப்பாடியார் வெளியிட்ட அறிவிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

எடப்பாடியாரின் இந்த அதிரடி அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டியுள்ளார். இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தேமுதிக சார்பில் எனது வரவேற்பை தெரிவித்து கொள்கிறேன். ஏற்கனவே நிவர், புரெவி புயல்களால் வாழ்வாதாரமின்றி தவித்து வந்த விவசாய பெருமக்களுக்கு, விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல விவசாய பெருமக்களின் வாழ்க்கை, புயல் தாக்குதலில் ஒரு பக்கம் திணறி வந்த நிலையில், விவசாய கடன் தள்ளுபடி என்பது அவர்களுக்கு மிகப்பெரிய ஒரு சந்தோஷத்தையும் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் என நம்புகிறேன். அதேபோல சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அரசு விதிப்படி கட்டணம் நிர்ணயித்து, குளறுபடிகளை களைந்து, மாணவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்கிய தமிழக அரசின் அறிவிப்பை தேமுதிக வரவேற்கிறது என தெரிவித்துள்ளார். 

click me!